”எங்க வீட்டுக்கு வந்து சாப்பிட்டு போங்க” – குடும்பத்திடம் சேர்த்த போலீசிடம் வேண்டிய பெண்!

பேருந்து நிலையத்தில் உறவுகளை விட்டு பிரிந்து இருந்த 65 வயது முதிய பெண்மணியை பத்திரமாக அவரது குடும்பத்தாருடன் சேர்த்து வைத்த மும்பை காவல்துறையின் செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அந்த முதிய பெண், மும்பையின் பாந்த்ரா பேருந்து நிலையத்தில் வைத்து காணாமல் போயிருக்கிறார். பதறிப்போன அந்த பெண் மும்பை போலீசாரை அணுகி தனது குடும்பத்தினரை விட்டு வழி தெரியாமல் பிரிந்துவிட்டதாகவும் அவர்களுடன் சேர்த்து வைக்கும்படி கேட்டிருக்கிறார்.
உடனடியாக வைல் பார்லே போலீசார் சம்பந்தப்பட்ட அந்த பெண்மணியின் குடும்பத்தாரை தொடர்புகொண்டு பேசி உத்தர பிரதேசத்துக்கு அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். மும்பை போலீசார் ஈடுபாட்டுடன் செய்த இந்த உதவிக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார்கள்.

View this post on Instagram

A post shared by Mumbai Police (@mumbaipolice)

இது குறித்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது மும்பை போலீஸ். அதில், குடும்பத்தினரை விட்டு தனித்து வந்த பெண் போலீசாரின் கையை இறுகப்பற்றி நன்றி தெரிவிப்பதும் பதிவாகியிருக்கிறது. மேலும் அந்த முதிய பெண்மணியின் உறவுக்கார இளைஞர அவரை பத்திரமாக மீட்டு சொந்த ஊருக்கு அழைத்துச் செல்வதும் இடம்பெற்றிருக்கிறது.
இதுபோக, தனது குடும்பத்தினருடன் இணைத்து வைத்த வைல் பார்லே போலீசிடம் கட்டாயம் எங்கள் வீட்டுக்கு சாப்பிட வரவேண்டும் என்றும் அந்த முதிய பெண் கேட்டுக்கொண்டிருக்கிறாராம். அந்த வீடியோவின் கேப்ஷனில், “குடிமக்களின் மனதிலும் இல்லத்திலும் எங்களுக்கான வழியை உருவாக்கும் விதம். குடும்பத்தை விட்டு தெரியாமல் வெளியேறி தவித்த 65 வயது பெண்மணியை பத்திரமாக உறவினர்களுடனேயே வைல் பார்லே போலீசார் சேர்த்து வைத்திருக்கிறார்கள்.” என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மும்பை போலீசின் இந்த வீடியோவை கிட்டத்தட்ட இரண்டரை லட்சத்துக்கும் மேலானோர் பார்த்து நெகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். அதில், “அனைத்து மாநில காவல்துறையினரும் இதேபோல கனிவாக நடந்துக்கொள்ள வேண்டும்.” என கமென்ட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.