புதுடெல்லி: பிபிசி செய்தி நிறுவனத்தின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை 60 மணி நேரத்திற்கு பின் நிறைவடைந்துள்ளது. குஜராத்தில் 2002ல் நடந்த கலவரம் தொடர்பாக 2 ஆவணப்படங்களை பிபிசி வெளியிட்டது சர்வதேச அளவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மும்பை, டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகங்களில் செவ்வாய்கிழமை காலை 11.30 மணிக்கு வருமானவரித்துறை சோதனையை தொடங்கியது. அலுவலகத்திற்குள் நுழைந்ததுமே அங்கிருந்த ஊழியர்களின் செல்போன்கள் மற்றும் மடிகணினிகளை பறிமுதல் செய்த வருமான வரித்துறையினர் அவற்றை ஆய்வு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து பிபிசி அலுவலகத்தின் பணப்பரிவர்த்தனைகள் குறித்த மின்னணு மற்றும் காகித ஆவணங்களை அவர்கள் சேகரித்தனர். மேலும் சர்வதேச வரி விதிப்பு, துணை நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு தொடர்பாக விசாரணை நடத்தினர். சுமார் 60 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனை நேற்று இரவு 11 மணியளவில் நிறைவடைந்தது. இந்த வருமான வரிசோதனை ஆளும் பாஜக அரசின் பழிவாங்கும் செயல் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.