சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டியை சேர்ந்த இராணுவ வீரர்கள் பிரபாகரன் மற்றும் அவரது தம்பி பிரபு ஆகியோரை, நாகோஜனஹள்ளி பேரூராட்சியின் ஒன்றாவது வார்டு திமுக கவுன்சிலர் சின்னசாமி கொடூரமாக தாக்கியதில், இராணுவ வீரர் பிரபு உயிரிழந்து இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
நாட்டுக்காகவும், மக்களை பாதுகாத்திடவும் அயராது உழைத்து கொண்டிருக்கும் இராணுவ வீரரின் உயிரைப் பறிப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியாக கருதுகிறார்களோ? என்று எண்ணத் தோன்றுகிறது. திமுகவினர் தங்களை தட்டி கேட்க யாரும் இல்லை என்ற மமதையில் தொடர்ந்து மக்கள் விரோத செயல்களை செய்து வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. திமுக தலைமையிலான ஆட்சி வந்ததிலிருந்து நாளுக்கு நாள் தொடர்ந்து அராஜக செயல்கள் நடைபெற்று கொண்டு இருப்பதால் மக்கள் பாதுகாப்பின்றி இருக்கிறார்கள். திமுகவினரை கட்டுப்படுத்தமுடியாமல், விட்டு வைப்பதால் தான் இன்று இராணுவ வீரரையே கொல்லக்கூடிய அளவுக்கு துணிச்சல் வந்துவிட்டது.
மக்களை காப்பாற்றவேண்டிய அரசாங்கமோ கைகட்டி வேடிக்கை பார்ப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு காரணமான திமுக கவுன்சிலர் சின்னசாமி மற்றும் அவரது சகாக்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, கடுமையான தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என்று இந்த ஆட்சியாளர்களை கேட்டுக்கொள்கிறேன்.
இராணுவ வீரர் பிரபுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.