விருதுநகர் என்.ஜி.ஓ காலனியைச் சேர்ந்தவர் வெயிலான் ரமேஷ். பி.பி.ஏ பட்டதாரியான இவர், விருதுநகரில் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். மரபுசார்ந்த விஷயங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான இவர், கடந்த ஒரு வருடத்துக்கு முன்பாக இன்டர்லாக் முறையில் மரபுசார் வீடொன்றைக் கட்டி முடித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக இன்டர்லாக் தொழில்நுட்பத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த வீடு, பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இதுகுறித்து அறிய வெயிலான் ரமேஷை அவருடைய வீட்டுக்குச் சென்று சந்தித்தோம். காலையில் வழக்கமான அலுவல் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர் நமக்காக நேரம் ஒதுக்கி பேசினார்.
அவர், “பல ஆண்டுகளாக நான் திருப்பூர் மாவட்டத்தில் பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றினேன். அப்போது கொங்கு மண்டலத்தில் இன்டர்லாக் முறையில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வீடு கட்டிக்கொடுக்கும் இன்ஜினீயர் குறித்து கேள்விப்பட்டேன். மிகக் குறைந்த செலவில், புதுமையான முயற்சியில் நம் எண்ணப்படியே விரும்பும் வடிவத்தில் வீட்டை அமைக்க முடியும் என்பது இன்டர்லாக் முறையின் சிறப்பம்சம். அதனால் இன்டெர்லாக் வீட்டின் மீது எனக்கு ஆர்வம் அதிகமானது.
ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்டர்லாக் முறையில் கட்டப்பட்ட வீடுகள் குறித்து தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன். இந்தவேளையில்தான் சொந்த முயற்சியில் தொழில் தொடங்க விருப்பப்பட்டு திருப்பூரில் வேலையை ராஜினாமா செய்தேன். பின் சொந்த ஊரான விருதுநகரில் இ-சேவை மையம் ஆரம்பித்து தொழில் நடத்தி வருகிறேன். எங்கள் குடும்பத்துக்குச் சொந்தமான நிலம் என்.ஜி.ஓ காலனியில் உள்ளது. அந்த இடத்தில் 600 சதுர அடி பரப்பளவில் எனக்காக புதிதாய் இன்டர்லாக் முறையில் வீடு கட்டத் திட்டமிட்டேன். இந்தத் திட்டத்துக்கு ஈரோட்டைச் சேர்ந்த பிரபல இன்ஜினீயரை தொடர்புகொண்டு பேசினேன். ஆனால், விருதுநகருக்கும் ஈரோட்டுக்குமான தொலைவு காரணமாக அவரால் இதை நேரில் நின்று சாத்தியப்படுத்த முடியாது எனத் தெரிவித்துவிட்டார்.
எனவே, அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கேரளாவிலிருந்து இன்டர்லாக் கற்களை வாங்கி விருதுநகருக்குக் கொண்டு வந்தேன். அந்த சமயம் கொரோனா ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டதால் என்னுடைய வீடு கட்டும் பணி இரண்டு ஆண்டாக முடங்கிக் கிடந்தது. ஒருவழியாக ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டு நிலைமை சீரான பின்பு, வீடு கட்டும் பணிகள் வேகமெடுத்தன. ஈரோடு இன்ஜினீயரின் அறிவுறுத்தலின்பேரில் உள்ளூரில் இன்ஜினீயர் உதவியுடன் எனது வீடு கட்டும் பணி நடைபெற்றது. என் ஆசைப்படியே, அங்குலம் அங்குலமாக எனது வீடு வளர்ந்தது. முழுவீச்சில் வீடுகட்டும் பணிகள் தொடங்கிய காலத்திலிருந்து இரண்டு மாதங்களுக்குள்ளாக அனைத்து வேலைகளும் செய்து முடிக்கப்பட்டன.
600 சதுர அடியில், இரண்டு படுக்கையறை, ஒரு சமையலறை, முற்றம், தண்ணீர் குளம் ஆகியவற்றுடன் அழகிய வடிவமைப்புடன் எனது வீட்டைக் கட்டி முடிப்பதற்கு ஆன மொத்த செலவு 15 லட்சம் ரூபாய் மட்டுமே. குறிப்பாக, வீட்டின் கட்டுமானத்தில் தரை மற்றும் கான்கிரீட் பூச்சுகளுக்கு மட்டுமே சிமென்ட் கலவை பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்றபடி சுவர்களுக்கோ, இதர பூச்சுகளுக்கோ எந்தவகையிலும் சிமென்ட், மண், தண்ணீர், ஜல்லிக்கற்கள் பயன்படுத்தப்படவில்லை. எனவே, அதற்கான செலவு, தொழிலாளர் கூலி ஆகியவை எனக்கு மிச்சமானது. இன்டர்லாக் முறையில் சுவர் எழுப்பிய பிறகு, சுவரில் தண்ணீர் உட்புகாத்தன்மைக்காக பெயின்டிங் மற்றும் கற்களின் உறுதிக்காக இணைப்புப் பகுதிகளில் ரசாயனக்கலவை கலந்த பூச்சு ஆகியவை மட்டுமே பூசப்பட்டது.
இந்த வீட்டின் மேற்கூரை கூட ‘ஃபில்லர் ஸ்லாப் ரூப்பிங்’ என்ற புதிய தொழில்நுட்பத்தைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேற்கூரையில் சீரான இடைவெளியில் ஒன்றன்மீது ஒன்றாக இரண்டு ஓடுகள் அடுக்கப்பட்டு அதன்மீது கான்கிரீட் போடப்பட்டுள்ளது. இதனால் சிமென்ட், மணல் செலவு கம்மியானது. மேற்கூரையும் புதிய டிசைனில் அச்சு வார்த்தது போல் அழகை அள்ளித்தரும். இந்த நுட்பத்தின் மூலமாக வீட்டினுள் நுழையும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவும். கொளுத்தி எடுக்கும் வெயிலால் மொட்டைமாடி கான்கிரீட் வழியாக வீட்டுக்குள் இறங்கும் வெப்பம் ‘ஃபில்லர் ஸ்லாப் ரூப்பிங்’ நுட்பத்தால் அடுக்கப்பட்டுள்ள இரு ஓடுகளுக்கு இடையிலான வெற்றிடத்தில் தங்கிவிடும். எனவே, வீடு குளிர்ச்சியாகவே இருக்கும்.
மரபுசார் வீடு என்பதற்காக வீட்டு வேலைகளுக்கான பொருள்களையும் பார்த்து பார்த்து வாங்கினேன். வீடுகட்டும் பணிக்காகத் தேக்கு மரத்தாலான நிலைக்கதவு, ஜன்னல் உள்ளிட்டவற்றை காரைக்குடியிலிருந்து ரெடிமேடாக வாங்கினேன். எனது தேவைக்காக புதிதாக மரம் அறுத்து செய்யக் கூடாது என்பதையும் டீலரிடம் தெளிவாகக் கூறியிருந்தேன். எனவே, பழைய வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த நிலைக்கதவு, ஜன்னல், தூண் ஆகியவை கிடைக்கும்வரை பொறுத்திருத்து வாங்கி மறு உருவாக்கம் செய்து என்னுடைய வீட்டுக்குப் பயன்படுத்தியுள்ளேன்.
இதுதவிர பழைமையை பிரதிபலிக்கும் வகையில் 1923-ல் லண்டனில் தயாரிக்கப்பட்ட பெண்டுலம் கடிகாரம், 120 வருடத்துக்கு முற்பட்ட கடிகாரம் என இரண்டும், பழைய காலத்து மின்விசிறிகள், அலமாரி, டி.வி.மேஜை உள்ளிட்டவற்றையும் வாங்கி வைத்துள்ளேன். அதேசமயம் நவீன காலத்துக்கு ஏற்றவகையிலும் வீட்டில் சில வசதிகளைப் பொருத்தியுள்ளேன்.
அதன்படி, வை-பை மூலம் இயங்கும் குடிநீர் மோட்டார், பல்பு, மின்விசிறி, சிசிடிவி கண்காணிப்பு கேமரா மற்றும் குளியலறையில் எல்.இ.டி வெளிச்சத்தில் தகிக்கும் கண்ணாடி தொடுதிரை, நீர் சுத்திக்கரிப்பு இயந்திரம் என நவீனங்களையும் உட்புகுத்தியுள்ளேன். இதுதவிர அலெக்ஸா கன்ட்ரோல் டிவைஸ், புரஜெக்டர், சென்சார் பல்புகள் ஆகியவையும் உள்ளன. சூழலுக்கு உகந்த வீடாக இது உள்ளது. மேலும், கட்டுமானம் செலவும் குறைவு. குறைந்த செலவுல நீடித்த வீட்டைக் கட்டணும்னு விரும்புபவர்களுக்கு இன்டர்லாக் முறை ரொம்பவே கைகொடுக்கும். நான் விரும்பியபடி வீட்டைக் கட்டியதில் மகிழ்ச்சி” என்று விடைகொடுத்தார் புன்னகையோடு.
இன்டர்லாக் முறையில் வீடு கட்டுவதற்கு ஆகும் செலவுகள் குறித்த விவரங்கள் குறித்து இன்ஜினீயர் ஒருவர் பேசுகையில், “சாதாரணமாக ஒரு இன்டர்லாக் கல்லின் விலை 75 ரூபாய். தூரத்தைப்பொறுத்து போக்குவரத்து செலவு, தொழிலாளர் கூலி ஆகியவையும் இதோடு கூடுதலாக சேரும். கற்கள் இறக்கும்போதே இன்ஜினீயர் வீடையும் கட்டிக்கொடுத்திடுவார். அதனால் இன்டர்லாக் கல் இறக்கும் கூலிதான், கஸ்டமருக்கு ஆகும் தொழிலாளர் செலவாகும். மற்றபடி சுற்றுச்சுவர் எழுப்புவதற்கென தனியாகத் தொழிலாளர் கூலி கொடுக்க வேண்டியதில்லை. ஆனால், இன்டர்லாக் முறையில் கழிப்பறை, செப்டிக் டேங்க், காம்பவுண்டு சுவர் போன்றவற்றை அமைத்துக் கொடுப்பதற்கு தனி மதிப்பீடு உண்டு. பொதுவாக, வீட்டுக்கான சுற்றுச்சுவர், பக்கச்சுவர், அறைகள் உள்ளிட்டவற்றை அமைப்பதற்கு அதிகப்பட்சம் 7 நாள்கள் போதுமானது. முழுவீச்சில் வேலை நடைபெற்றால் இன்டர்லாக் முறையில் இரண்டே மாதத்தில் முழு வீட்டையும் கட்டி முடித்துவிடலாம்.
இன்டர்லாக் கற்களை அடுக்கி வீடு கட்டினால் அது சிமென்ட் அளவுக்கு உறுதியாக இருக்குமா? என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுவதுண்டு. இந்த சந்தேகத்தை போக்கிடத்தான் இன்டர்லாக் கற்களை அடுக்கி வீடு கட்டிய பின் கட்டுமானத்தை மேலும் உறுதிப்படுத்தவும், தண்ணீர் புகாத்தன்மைக்கும் ரசாயனப்பூச்சு செய்யப்படுகிறது. இந்த முறைக்கு ஒரு கல்லுக்கு 12 ரூபாய் என கணக்கிடப்படுகிறது. இதன்மூலம் அந்தக்கட்டடம் பலமடங்கு உறுதித்தன்மையுடன் விளங்குவதை அறிய முடியும்” என நம்பிக்கையுடன் பேசினார் அந்த இன்ஜினீயர்.