திருப்பதி: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் ஆந்திராவில் 4 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். இவர் தனது தந்தையின் குப்பம் தொகுதியில் கடந்த ஜனவரி 27-ம் தேதி பாதயாத்திரை தொடங்கினார். தற்போது திருப்பதி மாவட்டத்தில் அவர் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
இதனிடையே ஆந்திராவில் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் பாதயாத்திரைகளுக்கு அந்தந்த பகுதி டிஎஸ்பியிடம் கட்டாயம் அனுமதி பெற வேண்டும், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் பாதயாத்திரை செல்லக் கூடாது, ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது என பல்வேறு நிபந்தனைகளை ஜெகன் அரசு பிறப்பித்துள்ளது. எனினும் தனது பாதயாத்திரை திட்டமிட்டபடி நடைபெறும் என லோகேஷ் அறிவித்திருந்தார்.
திருப்பதி மாவட்டத்தில் லோகேஷ் நேற்று பாதயாத்திரை சென்ற வழியில் கட்டப்பட்டிருந்த தெலுங்கு தேசம் கட்சிக் கொடிகள்மற்றும் பேனர்களை போலீஸார் அகற்றினர். இதனால், போலீஸாருக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. காளஹஸ்தி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டிக்கு கட்டப்பட்ட பேனர்களை அகற்றாமல் லோகேஷின் பேனர்களை மட்டும் அகற்றுவது ஏன் என்று தெலுங்கு தேசம் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீஸார் கட்சிக் கொடிகளை அவர்களிடம் ஒப்படைத்தனர். இந்த பாதயாத்திரையில், முதல்வர் ஜெகன்மோகனை லோகேஷ் கடுமையாக விமர்சித்தார்.