தென்காசி மாவட்டம், கடையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும் கல்குவாரிகளால் தங்களுக்கு இடையூறு ஏற்படுவதாகப் பொதுமக்களும் விவசாயிகளும் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார்கள். பூமியில் அதிக ஆழத்துக்குத் தோண்டி கனிம வளம் வெட்டி எடுக்கப்படுவதால் அருகிலுள்ள விவசாய கிணறுகள் வற்றிவிட்டன. அதனால் ஏராளமான விவசாயிகள் மாற்றுத் தொழிலுக்குச் சென்று விட்டனர்.
எனவே, கல்குவாரிகளைத் தடைசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதை வலியுறுத்தி போராட்டங்களிலும் ஈடுபட்ட போதிலும், எந்த நடவடிக்கையும் இல்லை. அரசின் அனுமதி பெறாமலே எம்-சாண்ட் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அதிகமாக இயங்கி வருவதாகவும் கடையம் வட்டார மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
கடையம் வட்டாரத்தில் செயல்படும் கல்குவாரிகளில் வெட்டி எடுக்கப்படும் கல், ஜல்லி, பாறைகள், எம்-சாண்ட் உள்ளிட்டவை அருகிலுள்ள கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த கனிமங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டால், இங்கு கிடைக்கும் வருவாயைவிடவும் இரு மடங்கு வருமானம் கிடைக்கும் என்பதால் தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கனிமங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
கனிமங்களை ஏற்றிச் செல்வதற்கு கனரக வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 10 முதல் 24 டயர்கள் கொண்ட ராட்சத லாரிகளில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிச் செல்லப்படுவதால் கிராமப்புறச் சாலைகள் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாகின்றன. அத்துடன் வேகமாகச் செல்லும் லாரிகளால் அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன.
கனிமங்களை வெட்டி எடுப்பது முதல் அவற்றைக் கொண்டு செல்வது வரையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதால் குவாரிகளை முறைப்படி கண்காணித்துக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்திருக்கிறது. இது தொடர்பாக கடையம் யூனியனுக்கு உட்பட்ட அனைத்து கிராம பஞ்சாயத்துத் தலைவர்கள் கூட்டமைப்புக் கூட்டத்தில், குவாரிகளை தடைசெய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், கனிமங்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் வருவதால் கீழ கடையம் ரயில்வே பீடர் சாலை மிக மோசமாகப் பழுதடைந்திருக்கிறது. அதனால் பள்ளிக்குச் செல்வோர், மருத்துவமனைக்குச் செல்லும் வாகனங்கள் உள்ளிட்டவை குண்டும் குழியுமான சாலையில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், அதிருப்தியடைந்த கீழக்கடையம் பஞ்சாயத்துத் தலைவர் பூமிநாத், தனது கிராமத்தினருடன் சென்று கனரக வாகனங்கள் செல்லும் சாலையின் நடுவில் குழி வெட்டி போக்குவரத்தைத் தடுத்திருக்கிறார்.
இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இது குறித்து நம்மிடம் பேசிய கீழக்கடையம் பஞ்சாயத்துத் தலைவரான பூமிநாத், ”இந்தப் பகுதியில் கல்குவாரிகள் விதிமுறைகளை மீறிச் செயல்படுவதால் விவசாயம் பாதிக்கப்பட்டு மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டனர். அதனால் குவாரிகளைத் தடைசெய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றியும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடையம் ரயில்வே பீடர் சாலையில் அதி வேகத்துடன் கனரக வாகனங்கள் செல்வதால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் அச்சத்துடன் செல்கிறார்கள். பெற்றோரும் பதற்றத்துடனே இருக்க வேண்டியிருக்கிறது. அத்துடன் கனரக வாகனங்கள் அதிக பாரத்துடன் செல்வதால் சாலைகள் பழுதடைந்து விட்டதுடன், கால் பதியும் அளவுக்கு தூசியாகக் கிடக்கிறது. லாரிகள் செல்லும்போது ஏற்படும் தூசிப்புயலால் சுவாச சீர்கேடு ஏற்படுகிறது. அதனால் லாரிகள் செல்ல முடியாதபடி பொக்லைன் மூலம் சாலையில் குழி ஏற்படுத்தியிருக்கிறோம்” என்றார்.
கனிம வளம் கடத்தலுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சாலையின் நடுவில் குழி தோண்டியபோது, சில லாரிகள் அந்த வழியாக வந்தன. மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து அவை திரும்பிச் சென்றுவிட்டன. இந்தச் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல முடியாதபடி பள்ளம் தோண்டப்பட்டிருப்பதால் லாரிகள்10 கி.மீ தூரம் சுற்றியபடி செல்வதாக குவாரி தரப்பினர் தெரிவிக்கின்றனர்.