ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரிக்க வந்த அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு பெண் வாக்காளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. ஒவ்வொரு பகுதிகளிலும் வேட்பாளர்கள் வாக்காளர்களை வீடு வீடாக சந்தித்து வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காலையில் மேளதாளத்துடன், மாலையில் வான வேடிக்கையுடன் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களம் விழா கோலம் பூண்டுள்ளது. இந்நிலையில், வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் பெண் வேட்பாளர் ஒருவர் தென்னரசுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
எம்.எல்.ஏ.வாக இருந்தபோது சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தென்னரசு செய்து தரவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிரசாரத்தில் ஈடுபட்ட வேட்பாளர் தென்னரசுவிற்கு பெண் வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பெண் வாக்காளர்களின் குற்றச்சாட்டுகளை கேட்காமல் அதிமுக வேட்பாளர் தென்னரசு அவ்விடத்தை விட்டு புறப்பட்டு சென்றார். நேற்று காலை ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி சந்தைக்கு பிரச்சாரத்திற்கு சென்ற தென்னரசுக்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர்.
தென்னரசு எம்.எல்.ஏவாக இருந்தபோது கொரோனா காலத்தில் காய்கறி சந்தை வ.உ.சி பூங்காவிற்கு மாற்றப்பட்டது. ஆனால் காய்கறி சந்தையை மீண்டும் ஆர்.கே.வி சாலைக்கு மாற்ற பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறிய வியாபாரிகள் தென்னரசுவிடம் இது தொடர்பாக சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். ஆனால் இதற்கு எல்லாம் பதிலளிக்க முடியாமல் தென்னரசு திருப்பி சென்றார். தற்போது அதேபோலவே, அடிப்படை வசதிகளை செய்து தராத தென்னரசுக்கு பெண் வாக்காளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.