தேவையற்ற கர்ப்பத்தைத் தடுக்க பெண்கள் கருத்தடை மாத்திரைகளை உபயோகிப்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல ஆண்களுக்குக் கருத்தடை மாத்திரைகள் இருக்கின்றனவா என்றால் இல்லை.
இந்நிலையில், ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகள் குறித்த ஆய்வு எலிகள் மீது நடத்தப்பட்டது. அதில், ஆண்களுக்கான புதிய கருத்தடை மாத்திரையை எலிக்குச் செலுத்திய ஒரு மணி நேரத்திற்குள், விந்தணு நீந்துவதை நிறுத்தியதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆதாரம் கருத்தடை உலகில் கேம் சேஞ்சிங்காக அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஹார்மோன் மாற்றம் இல்லை
எலிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், விந்தணுக்களைக் குறைந்தபட்சம் சில மணிநேரமாவது நிறுத்தி, அவை கருமுட்டையை அடைவதைத் தடுத்திருக்கிறது.
பெண்களுக்கான கருத்தடை மாத்திரைகள் பெண்களின் இனப்பெருக்க ஹார்மோன்களை கட்டுப்படுத்தும். அதுபோல் அல்லாமல், ஆண்களுக்கான இந்தக் கருத்தடை மாத்திரைகள் ஹார்மோன்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. ஹார்மோன் குறைபாட்டால் உண்டாகும் பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை.
சோதனையும் முடிவும்
எலிகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப ஆய்வில், `TDI-11861 எனப்படும் மருந்தின் டோஸ் கொடுக்கப்பட்டது. இது இனச்சேர்க்கையின் போதும் அதற்குப் பின்னரும், விந்தணுக்களை அசைய விடாமல் சுமார் 3 மணி நேரம் தடுத்துள்ளது.
3 மணி நேரத்திற்குப் பின் இயக்கம் திரும்பி உள்ளது. அடுத்த 24 மணிநேரத்திற்குப் பிறகே அடுத்த விந்தணுக்கள் இயல்பாகச் செயல்படும் நிலைக்குத் திரும்பியுள்ளன.
ஆண்களுக்கான கருத்தடை முறைகளைப் பொறுத்தவரை காண்டம் மற்றும் வாஸெக்டமி என இரண்டு முறைகள் மட்டுமே உள்ளன. அப்படியெனில் ஆண்களுக்கான கருத்தடை விருப்பங்கள் போதிய அளவில் இல்லை என்றே கூற வேண்டும். இப்படியிருக்கும் பட்சத்தில், இந்தச் சோதனையின் முடிவுகள் ஆண்களுக்கான விருப்பத் தேர்வாக இருக்கும்.
ஆராய்ச்சியாளரின் விளக்கம்
நியூயார்க்கில் உள்ள வெயில் கார்னெல் மெடிசினில் ஆராய்ச்சியாளராக இருக்கும், டாக்டர் மெலனி பால்பாக் (Melanie Balbach) கூறுகையில், `தீவிரமாகச் செயல்படும் கரையக்கூடிய அடினிலைல் சைக்லேஸ் (எஸ்ஏசி) மட்டுப்படுத்திகள் தற்காலிகமாக ஆண் எலிகளை மலட்டுத்தன்மையாக்கின. இவை 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரத்திற்குள் வேலை செய்கின்றன. இந்த முறை கருத்தடை மீளக்கூடிய, பயன்படுத்த எளிதானது.
இது மனிதர்களில் வேலை செய்தால், ஆண்கள் எப்போது வேண்டுமானாலும், தேவைப்படும்போது எடுத்துக் கொள்ள முடியும். கருவுறுதல் பற்றி தினசரி முடிவுகளை எடுக்க முடியும்.
ஆனால் இது பாலியல் ரீதியாகப் பரவும் நோய்த் தொற்றுகளில் இருந்து பாதுகாக்காது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதற்கு ஆணுறைகள் தேவைப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.
இன்னும் இவை மனிதர்களில் சோதிக்கப்படவில்லை. மனித பயன்பாட்டிற்கு வர இன்னும் பல வருடங்கள் எடுக்கும். மனிதர்களுக்கு இந்தச் சோதனை செய்வதற்கு முன்பு முயல்களில் பல சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இது குறித்தான தகவல்கள் நேச்சர் கம்யூனிகேஷனில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.