அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி புகார் வழக்கு மீதான விசாரணையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
அமைச்சர் செந்தில்பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில், நீதிபதி கிருஷ்ண முராரி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணை நடைபெற்றது
அப்போது, அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா, விசாரணையை அடுத்த வாரம் வெள்ளிக் கிழமைக்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு பட்டியலாகவில்லை. பதிவாளரை அழைத்துப் பேச வேண்டும். அமலாக்கத் துறை வழக்குகளும் நிலுவையில் உள்ளது, அவையும் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் தேவையில்லாமல் வழக்கு விசாரணை தாமதமாகிறது. அதனால் கூடுதல் கால அவகாசம் வழங்கக் கூடாது என குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன், அமலாக்கத்துறை 3 வழக்குகளில் இன்னும் பிழைகள் சரிசெய்யப் படாமல் நிலுவையில் உள்ளதாக சுட்டிக் காட்டினார். அப்போது, விசாரணை பட்டியல் குறித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த, நீதிபதி கிருஷ்ணா முராரி, உச்ச நீதிமன்ற வழக்குகள் பட்டியலில் எந்த பிரச்னையும் இல்லை, ஆனால், ஒரு சில சமயங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தவிர்க்க இயலாது என விளக்கினர்.
தொடர்ந்து அமலாக்கத் துறை கோரிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், தொடர்ந்து ஏன் கால அவகாசம் கோரி விசாரணையை தாமதப்படுத்த முயல்கிறார்கள் என சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் கேள்வி எழுப்பினர். இதையடுத்து இந்த விவகாரத்தில், தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் திங்கட்கிழமை விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM