அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்தில் ரயில் விபத்து ஏற்பட்டு இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால் மக்கள் மத்தியில் நிலவும் பதற்றம் மட்டும் குறையவில்லை. இன்னும் சரியாக சொல்லப் போனால் பரபரப்பு சற்றே அதிகரித்துள்ளது. அப்படியென்ன நடந்தது என்று கேட்கிறீர்களா? எல்லாம் நச்சுத்தன்மை வாய்ந்த வாயுக்கள். சுற்றுவட்டாரப் பகுதிகள் பீதியில் உறைந்து போய் கிடக்கின்றன. இனி விரிவாக பேசுவோம்.
ஓஹியோ ரயில் விபத்து
கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி ஓஹியோ மாகாணத்தில் உள்ள கிழக்கு பாலஸ்தீன் நகரில் உள்ள ரயில் பாதையில் நார்போல்க் சதர்ன் ரயில் ரோடு- ஆபரேட்டட் சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. யாரும் எதிர்பாராத வகையில் நகருக்கு அருகே திடீரென தடம் புரண்டது. இதில் எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை. ஆனால் சரக்கு ரயிலில் ஏராளமான நச்சுத்தன்மை கொண்ட வாயுக்கள் மிகப்பெரிய பேரல்களில் கொண்டு செல்லப்பட்டன.
மார்பர்க் வைரஸ்: வெடித்து கிளம்பும் புதிய ஆபத்து… கன்ஃபார்ம் பண்ண WHO!
நச்சு வாயுக்கள் வெளியேறின
குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் வினைல் குளோரைடு, பியூட்டைல் அக்ரிலைட் ஆகியவை திரவ நிலையில் இருந்துள்ளன. விபத்து ஏற்பட்டதும் பேரல்களில் இருந்து வெளியேறி அருகிலுள்ள நீர் நிலைகளில் கலந்தன. மறுபுறம் வாயுக்கள் தீப்பற்றி எரிய ஆரம்பித்தன. கட்டுக்கடங்காத வகையில் வானை நோக்கி கரும்புகை மேல் எழும்பியது. இதனால் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.
ரஷ்யாவின் செர்னோபில்
இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி கடந்த சில நாட்களாகவே இணையத்தை வைரலாக்கி வருகின்றன. ரஷ்யாவில் 1986ல் நடந்த செர்னோபில் அணு உலை விபத்து போல பேரழிவை ஏதும் உண்டாக்கி விடுமோ என்ற அச்சம் அரசுக்கும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பகுதியில் அரசின் குழுக்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. முன்னதாக கிழக்கு பாலஸ்தீன் நகரின் நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பாதிப்பு எப்படியுள்ளது?
காற்று கூட விஷயமாகி இருக்குமோ என்ற அச்சம் உண்டானது. விபத்து நடந்த அடுத்த சில நாட்களில் நீரில் இருந்த உயிரினங்கள் பலியாக தொடங்கின. அப்பகுதியில் இருந்து பொதுமக்கள் சில நாட்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டது.
ரஷ்யாவை விட்டு உடனே வெளியேறுங்கள்; அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை.!
இந்த சூழலில் பிப்ரவரி 17ஆம் தேதியான இன்று காற்றின் தரம் படிப்படியான பாதுகாப்பான நிலைக்கு முன்னேறி வந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் பயன்படுத்தும் நீர் பலகட்டப் பரிசோதனைகளுக்கு பின்னர், தற்போது பயன்படுத்தும் நிலைக்கு வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட கால பிரச்சினை
இருப்பினும் நீண்ட கால அடிப்படையில் பிரச்சினைகள் உண்டாக வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. காற்றில் கலந்த நச்சுக்கள் கட்டிடங்களின் மேற்பரப்பில் அப்படியே படிந்து வருகின்றன. கிணறுகளில் சிதறியுள்ளன. பூமியின் மீதுள்ள விரிசல்கள் வழியே உட்புறம் செல்ல வாய்ப்புள்ளது. இதன் பாதிப்புகள் எப்படி இருக்கும் என்பதை தற்போது சொல்லி விட முடியாது. ஆபத்து முழுமையாக நீங்கவில்லை என்பது போல குறிப்பிட்டுள்ளனர்.