இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால், தங்கத்தின் இறக்குமதி கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 76% குறைந்துள்ளது.
மக்கள் தங்கம் வாங்குவதும் குறைந்துள்ளது. இதனால் கடந்த 32 மாதங்களில் இல்லாத அளவுக்கு 76% தங்கம் இறக்குமதி குறைந்துள்ளது.
2023 ஜனவரி மாதம் இந்தியாவில் 697 மில்லியன் டாலர் மதிப்பில் 11 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2.38 பில்லியன் டாலர் மதிப்பில் 45 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
2023 பிப்ரவரி 1-ம் தேதி தாக்கலான மத்திய பட்ஜெட்டில், தங்கத்தின் இறக்குமதி வரி குறைக்கப்படும் என்று நகை வியாபரிகள் பெரிதும் எதிர்பார்த்தார்கள். அதனால் ஜனவரி மாதத்தின் இரண்டாம் பாதியில் நகை வியாபாரிகள் தங்கம் அதிகமாக வாங்கவில்லை.
ஆனால் பட்ஜெட்டில் தங்கம் மட்டுமல்லாமல் தங்க நகை மற்றும் தங்கத்தால் ஆன பொருட்களின் வரியும் அதிகரிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் அறிவித்தார்.
இந்தியாவில் பெருமளவில் கல்யாணம் போன்ற விசேஷ காலங்களில் தான் அதிகளவில் தங்கம் வாங்கப்படும். தற்போது கல்யாண சீசன் வருவதால் நகை வியாபாரிகள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டுவார்கள் என்றும், இது தங்கம் இறக்குமதியை அதிகரிக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.