தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்த மேலும் ஒரு நீதிபதி: கோர்ட் நியமிக்கிறது

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வருகிற மார்ச் 26ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தேர்தலுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று சங்க உறுப்பினர்களான கமல்குமார், சீனிவாசன் உள்பட 8 தயாரிப்பாளர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அவர்கள் தாக்கல் செய்த மனுவில் “இந்தத் தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில், தென் இந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் இந்திய திரைப்பட சம்மேளனத்தில் நிர்வாகிகளாக உள்ளவர்கள் தவிர, வேறு சங்கங்களில் நிர்வாகிகளாக உள்ளவர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிட தகுதியில்லை என சங்க விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. பாரபட்சமான இந்த திருத்தத்தை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும். மேலும், தேர்தலை நடத்த தேர்தல் அதிகாரி நியமிக்கப்படவில்லை. உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நியமித்து, வாக்காளர் பட்டியலை வெளியிட்டு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும். இந்த தேர்தல் குறித்த அறிவிப்பை ரத்து செய்து, அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பு தரப்பு வழக்கறிஞர் தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மனுதாரர்கள் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் தயாரிப்பாளர் சங்கம் தன்னிச்சையாக நீதிபதியை நியமித்தது தவறு என்று வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் தயாரிப்பாளர் சங்கம் நியமித்துள்ள நீதிபதி வெங்கட்ரான் நியமனத்தை நீதிமன்றம ஏற்கிறது. அவரோடு நீதிமன்றம் நியமிக்கும் ஒரு முன்னாள் நீதிபதியும் இணைந்து தேர்தலை நடத்த வேண்டும். தேர்தல் முடிந்த பிறக இரு நீதிபதிகளும் இணைந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என்று உத்தரவிட்டது. இதனால் முதன் முறையாக தயாரிப்பாளர் சங்க தேர்தலை இரண்டு நீதிபதிகள் இணைந்து நடத்த இருக்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.