மயில்சாமி: மன்னித்துவிடுங்கள் என்னால் பேச முடியவில்லை என செல்ல நினைத்தேன் – கலங்கிய ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் முக்கிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான மயில்சாமி  மாரடைப்புக் காரணமாக நேற்று உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மயில்சாமியின் உடல் இறுதி அஞ்சலிக்காக சாலிகிராமத்தில் அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. திரையுலகினர், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தி வந்தனர்.

அந்தவகையில் தற்போது மறைந்த நடிகர் மயில்சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “ மயில்சாமி அவர்கள் என் நெருங்கிய நண்பர். அவரை 23, 24 வயசுல மிமிக்கிரி ஆர்டிஸ்டா இருக்கும்போதே எனக்கு தெரியும். மிமிக்கிரி ஆர்டிஸ்டா இருந்து நகைச்சுவை நடிகரா சினிமாத் துறைக்கு வந்தார்.  அவர் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர், அதைவிட மிகத்தீவிர சிவன் பக்தர். அடிக்கடி நாங்கள் சந்திப்போம்.

மயில்சாமி

அப்போது நான் சினிமாத் துறையை பற்றி அவரிடம் கேட்பேன், அவர் சினிமாவைப் பற்றி பேசவே மாட்டார். இரண்டு விஷயங்களை பற்றிதான் அவர் அடிக்கடி பேசுவார். ஒன்று எம்.ஜி.ஆர். மற்றொன்று சிவன். நாங்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்தும் கூட நிறைய படங்கள் நடிக்கவில்லை. ஒவ்வொரு தடவையும் திருவண்ணாமலையில் நடக்கக்கூடிய கார்த்திகை தீபத்திற்கு சென்றுவிடுவார். அங்கு இருக்கும் கூட்டத்தை பார்த்துவிட்டு அவர் ஹீரோவாக நடித்து விட்டு வெற்றிகரமாக படம் ஓடுவது போன்று அவர் சந்தோஷப்படுவார். கடைசி முறை கார்த்திகை தீபத்திற்கு என்னைத் தொடர்பு கொண்டார். நான் படப்பிடிப்பில் இருந்ததால் என்னால் எடுக்க முடியவில்லை. மூன்று முறை தொடர்பு கொண்டிருக்கிறார் என்னால் எடுக்கவே முடியவில்லை.

அடுத்த முறை சந்திக்கும்போது, `என்னை மன்னித்துவிடுங்கள் என்னால் பேச முடியவில்லை!’ என்று சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். அப்படியே நான் மறந்துவிட்டேன், இப்போ அவரே மறைந்துவிட்டார். நடிகர் விவேக், மயில்சாமி இந்த  இரண்டு நகைச்சுவை நடிகர்களின் இழப்பு சினிமாத் துறைக்கு மட்டுமல்ல சமூகத்திற்கும் மிகப்பெரிய இழப்பு.  அவர் இந்த சிவன் ராத்திரியில் இறந்தது தற்செயலாக நடத்த விஷயம் கிடையாது.  அது சிவனின் கணக்கு. தன்னுடைய தீவிர பக்தரை அவருடைய உகந்த நாளில் எடுத்துக்கொண்டார்.

மயில்சாமி

அவருடைய குடுமத்திற்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. அவரின் வாரிசுகளுக்கு சினிமா துறையில் நல்ல ஒரு எதிர்காலம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். சிவன் கோவிலில் நான் பாலபிஷேகம் செய்யவேண்டும் என்று டிரம்ஸ் சிவமணியிடம் சொல்லியிருக்கிறார். சிவமணியிடம் இதைப் பற்றி பேசிவிட்டு மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன்” என்று தெரிவித்தார்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.