இந்தியாவில் ஒரே ஆண்டில் 15 ஆயிரம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடத்தி சாதனைமத்திய சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

புதுடெல்லி,

நமது நாட்டில் கடந்த ஒரே ஆண்டில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்தார்.

டெல்லியில் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு அறிவியல் மாநாடு-2023 நடந்தது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் சார்பில் நடந்த இந்த மாநாட்டில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நமது நாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு பின்னர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வேகம் எடுத்துள்ளன. கடந்த ஒரு ஆண்டில் மட்டுமே 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் இந்தியாவில் நடத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்திருப்பது இதுவே முதல் முறை.

இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 27 சதவீதம் அதிகம் ஆகும்.

இந்த மாற்றங்கள் வரவேற்கத்தகுந்தவை.

நாட்டின் தொழில்நுட்ப மனிதவளத்தின் பயன்பாடு மற்றும் மூன்றாம் நிலை பராமரிப்பு வசதிகள் போன்ற உள்கட்டமைப்பு மற்றும் உபகரணங்களை உகந்த முறையில் பயன்படுத்தப்பட வேண்டும். அவற்றைத் திறமையாகப் பயன்படுத்தவும் வேண்டும்.

நமது நாட்டில் முதியோர் மக்கள்தொகை வளர்ந்து வருகிறது. அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்துவதற்கு, தகவல் தொடர்பு மற்றும் விழிப்புணர்வு மூலோபாயத்தை மேம்படுத்துவது மிகவும் முக்கியம். இதனால் உறுப்பு தானம் செய்பவர்கள் முன்வருவார்கள்.

பயிற்சி திட்டங்கள், புதிய படிப்புகள் உருவாக்கப்பட வேண்டும். மேலும் மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும்.

நமது நாட்டில் 640-க்கும் மேற்பட்ட மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகள், கல்லூரிகள் இருந்தாலும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது குறிப்பிட்ட ஆஸ்பத்திரிகளில் மட்டுமே நடைபெறுகிறது. அறுவை சிகிச்சைகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யத்தக்க அத்தகைய ஆஸ்பத்திரிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.

இதனால் நாட்டில் அறுவை சிகிச்சைகள் மற்றும் உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சைகள் அதிக எண்ணிக்கையில் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.