பாட்னா: பிஹாரில் மெட்ரிகுலேசன் தேர்வுகள் கடந்த வாரம் தொடங்கின. கைமுர் நகரில் தேர்வு எழுதச் சென்ற மாணவிகளின் பேருந்து கடந்த வெள்ளியன்று கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. தேர்வு தொடங்க சில நிமிடங்களே இருந்த நிலையில், மாணவிகள் அனுமதிச் சீட்டு, பேனா ஆகியவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு தாங்கள் வந்த வாகனங்களை அப்படியே விட்டுவிட்டு தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டமெடுக்கத் தொடங்கினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தின.
இந்த நிலையில் கைமுர் மாவட்ட கல்வி அதிகாரி சுமார் சர்மா கூறுகையில், “ இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து தற்போது சீர் செய்யப்பட்டுள்ளது. சாலைப் பணிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்” என்றார். பிஹார் மாநில மெட்ரிகுலேஷன் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களை விட மாணவிகளின் எண்ணிக்கை மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.