சென்னை: அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக, அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சி தலைமை கழக நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஒற்றைத் தலைமை பிரச்சினை காரணமாக, சென்னையில் பழனிசாமி ஏற்பாட்டில் கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதை எதிர்த்து பன்னீர்செல்வம் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார். இதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் இபிஎஸ், ஓபிஎஸ் இரு தரப்பினருமே வேட்பாளர்களை அறிவித்தனர். இரட்டை இலை சின்னம் கோரி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தை நாடினார். அதில் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி, பழனிசாமி நிறுத்திய வேட்பாளர் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டது. இதற்கிடையில், ஓபிஎஸ் தனது வேட்பாளரைத் திரும்பப் பெற்று, இரட்டை இலைக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தார். எனினும், அவரது தரப்பில் வழங்கப்பட்ட நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. இதனால் தேர்தலில் அவர் பிரச்சாரம் மேற்கொள்ள முடியவில்லை.
இந்நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்கொள்வது குறித்தும் கட்சி நிர்வாகிகளிடம் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை எழும்பூரில் உள்ள அசோகா ஹோட்டலில், மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் தலைமை நிர்வாகிகள் ஆகியோருடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.