உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய வீரர்

கெய்ரோ,

எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு சார்பிலான 2023-ம் ஆண்டுக்கான உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்து வருகிறது. ரைபிள், பிஸ்டல் ஆகிய பிரிவுகளுக்கான போட்டி நடந்தது.

இதில், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிஸ்டல் பிரிவில், 64 பேர் கலந்து கொண்ட தகுதி சுற்றுக்கான போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட வருண் தோமர் 583 புள்ளிகள் பெற்று 2-வது இடத்திற்கு முன்னேறினார். சுலோவேக்கியா நாட்டின் ஜுராஜ் டுஜின்ஸ்கி 585 புள்ளிகளுடன் முதல் இடம் பெற்றார். இந்தியாவின் மற்றொரு வீரரான சரப்ஜோத் சிங் 5-வது இடம் பெற்றார்.

இந்த போட்டி முடிவில் 8 பேர் தேர்வு பெற்றனர். அவர்களில் 2 இந்திய வீரர்களும் அடங்குவர். இதனை தொடர்ந்து பதக்கங்களை வெல்வதற்கான இறுதி போட்டி நடந்தது. இதில், இந்திய வீரர்கள் 2 பேரும் அதிரடியாக போட்டியிட்டு சம அளவில் புள்ளிகளை பெற்றனர்.

டுஜின்ஸ்கி (254.2 புள்ளிகள்) முதல் இடத்திலும், இத்தாலியின் பாவ்லோ மோன்னா (252.8 புள்ளிகள்) 2-வது இடமும் பெற்றனர். வெண்கல பதக்கம் வெல்வதற்கான 3-வது இடம் யாருக்கு என்பதில் இந்திய வீரர்களிடையே போட்டி நிலவியது.

இதில், 19 வயதுடைய தோமர், சக வீரரான சரப்ஜோத் சிங்கை ஷூட்-ஆப் முறையில் வீழ்த்தி வெற்றி பெற்று உலக கோப்பை போட்டியில் தனது முதல் பதக்கத்தினை வென்று உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.