இந்தியாவின் முதல் ஹைப்ரிட் சவுண்டிங் ராக்கெட் மூலம் 150 செயற்கைக்கோளை விண்ணில் ஏவி சாதனை

மாமல்லபுரம்: நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் இணைந்து தயாரித்த 150 சிறிய ரக பிக்கோ செயற்கைக்கோள்களுடன் இந்தியாவின் முதலாவது ஹைப்ரிட் சவுண்டிங் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் கிராம கடற்கரையோரத்தில் இருந்து நேற்று இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருவிடந்தை அருகே டிடிடிசி ஓசோன் வியூவில் கடற்கரையோரம் அமைக்கப்பட்டிருந்த ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை 8:15 மணிக்கு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சவுண்டிங் ராக்கெட்டில் இருந்து ஏவப்பட்ட செயற்கைக்கோள் மூலம் வானிலைநிலவரம், காற்றின் நச்சுத்தன்மை, மண் வளங்கள், ஆக்சிஜன், ஹைட்ரஜன் அளவு மற்றும் வளிமண்டல நிலை, கதிர்வீச்சு தன்மை குறித்த தகவல்களை பெற முடியும்.

ராமேசுவரத்தில் இயங்கும் அப்துல் கலாம் அறக்கட்டளை, மார்ட்டின் அறக்கட்டளை, பேஸ் ஜோன் இந்தியா அறக்கட்டளை இணைந்து, `டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் செயற்கைக்கோள் ஏவும் திட்டம் 2023′-ஐ வெற்றிகரமாக செயல்படுத்தின.

மறு பயன்பாடு ராக்கெட்

100 தேர்தெடுக்கப்பட்ட மாணவர்களால் மறு பயன்பாட்டுக்கு உதவும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைத்து உருவாக்கப்பட்டது. மேலும், வெவ்வேறு ‘பே லோட்’களை கொண்ட சிறிய ரக 150 செயற்கைக்கோள்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் இருந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம்வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பில் பங்கேற்றனர்.

இதேபோல, தமிழகம், புதுச்சேரியில் உள்ள மீனவ சமூகத்தை சேர்ந்த 200 மாணவர்கள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பழங்குடியினத்தை சேர்ந்த100 மாணவர்கள் கலந்துகொண்டனர். தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மட்டுமின்றி அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் குறித்து கற்றுக்கொண்டனர்.

ஆளுநர் தமிழிசை பாராட்டு

நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசும்போது, “முதலாவது ஹைப்ரிட் சவுண்டிங் ராக்கெட் ஏவும் திட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தியதற்காக அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறும்போது, “செயற்கைக்கோள் சார்ந்த தொழில் துறையில் உள்ள வாய்ப்புகளை மாணவ சமுதாயம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதே வேளையில் முதலாவது ஹைபிரிட் சவுண்டிங் ராக்கெட்டை விண்ணில் ஏவியதற்கு பாராட்டுகள். ஒருமித்த கருத்து கொண்டவர்களின் கனவு இந்த சாதனையை நிஜமாக்கியுள்ளது. உலகஅரங்கில் இந்தியா விண்வெளி அறிவியலில் வேகமாக முன்னேறி வரும் நாடாக உள்ளது. எனவே, இளைஞர்கள் இத்துறைக்கு அதிக அளவில் வர வேண்டும்” என்றார்.

ஸ்பேஸ் ஜோன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆனந்த் மேகலிங்கம் கூறும்போது, “இத்திட்டத்தின் மூலம், புதிய தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்வதிலும், எளிதாக கருத்துகளை உள்வாங்கிக் கொள்வதிலும் மாணவர்கள் ஆர்வம் காட்டியதை பாராட்ட வேண்டும். மேலும், நிபுணத்துவம் பெற்ற வல்லுநர்களின் வழிகாட்டுதலால் மாணவர்கள் கடுமையாக உழைத்து இத்திட்டத்தை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளனர்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில், மார்ட்டின் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்டிஎன் எம்.லீமாரோஸ், மார்ட்டின் குழும நிர்வாக இயக்குநர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், ராமேசுவரத்தில் உள்ள அப்துல் கலாம்சர்வதேச அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் எம்.நஜீமா மரைக்காயர் மற்றும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

விண்ணில் ஏவப்பட்ட இந்த 150 சிறிய ரக செயற்கைக்கோள்களும் 8 மணி நேரத்துக்கு பிறகு பாராசூட் மூலம் தரை இறங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.