ராஜஸ்தான் பகுதியில் சுதந்திரமாக பறக்கும் ஓக்கி புயலால் பாதிக்கப்பட்ட சினேரியஸ் கழுகு

ஒக்கி புயலின் போது பாதிப்படைந்த சினேரியஸ் கழுகு 2600 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ராஜஸ்தான் பகுதியில் சுதந்திரமாக பறக்க விடப்பட்டது. தன் வாழ்வியலோடு கழுகு ஒத்து வாழ்வதாக ஜிபிஎஸ் மூலம் ட்ராக் செய்து வரும் வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் என்ற இடத்தில் கடந்த 2017-ம் ஆண்டு ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட சினேரியஸ் கழுகு, வனத்துறையினரால் மீட்கப்பட்டு, உரிய சிகிச்சை வழங்கப்பட்டது. அன்று முதல் இப்பறவை உதயகிரி உயிரியல் பூங்காவில் வைத்து வனத்துறை அலுவலர்களால் சீரான, சரியான, தொடர்ந்து கவனம் செலுத்தி பராமரிக்கப்பட்டு, வளர்ந்து வந்தது.
image
நான்கு வருடங்களாக சிகிச்சையும் பராமரிப்பும் பெற்று வந்த இந்த சினேரியஸ் கழுகு, காட்டில் வாழ்வதற்கான தகுந்த உடல்நிலையோடு இருக்கிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். ஒக்கி புயலின் நினைவாக இந்த சினேரியஸ் கழுகிற்கு, ‘ஒக்கி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சினேரியஸ் வகை கழுகானது, அதிக தொலைவு இடம் பெயர்ந்தும், கூட்டமாக வாழும் ஒரு சமூக பறவை. அதன் அடிப்படையில், தமிழ்நாடு வனத்துறையானது சிறப்பு முயற்சிகள் எடுத்து, இப்பறவையை இயற்கை சூழலில் மீள அனுப்ப ஆணையிட்டது.
தனியாக மீட்கப்பட்ட இளம் சினேரியஸ் கழுகு இனமானது அலைந்து திரியும் இயல்புடையது. காற்றோட்ட திசையின் மாறுபாடு காரணமாக இக்கழுகு கன்னியாகுமரியை வந்தடைந்திருக்கலாம். பெரிய கழுகு பெரும்பாலும் காற்றோட்ட திசை மற்றும் பருவநிலை சார்ந்த வெப்பத்தின் அடிப்படையில் உயர பறக்கும் தன்மையுடையது. பருவநிலை மாறுபாட்டால், இந்த இளம் கழுகு பாதிக்கப்பட்டிருக்கலாம். இந்தியாவில்,சினேரியஸ் வகை கழுகு வாழ்வதற்கு ஏற்ற பருவநிலையை கருத்திற்கொண்டு, வடஇந்தியாவில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விடுவிக்கலாம் என்று பரிந்துரை பெறப்பட்டது. இதற்காக ராஜஸ்தான் மாநில வனஉயிரின துறையிடம் தேவையான அனுமதி பெறப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் கால்நடை சடலங்களை சேகரித்து கழுகினங்களுக்கு உணவளிக்கும் பல இடங்கள் உள்ளன. அதில் ஜோத்பூர் நகரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள ‘கெரு’ என்ற இடத்தில் இருக்கும் கால்நடை சடலங்களை சேகரித்து வைக்கும் இடத்தில், அதே வகை கழுகினங்கள் மீட்கப்பட்ட சினேரியஸ் கழுகினை விடுவிக்கக் கூடிய சரியான இடமாக பரிந்துரை செய்யப்பட்டது.
image

இந்த இடத்தை கழுகின் உடலில் உரிய டிரான்ஸ்மீட்டர் பொருத்தப்பட்டு இயற்கை சூழலில் விடுவிக்க தீர்மானிக்கப்பட்டது. இந்த உயிரியல் பூங்கா கன்னியாகுமரியிலிருந்து சுமார் 2600 கி.மீ. தொலைவில் உள்ளது. சாலை அல்லது இரயில் மார்க்கமாக கழுகினை கொண்டு செல்வதற்கு 4 முதல் 5 நாட்கள் ஆகும்.
மேலும் நெடுந்தூர சாலை/ இரயில் பயணம் இப்பறவைக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடும். எனவே இந்த கழுகினை வான் வழியாக ஜோத்பூர் கொண்டு செல்ல மத்திய விமான அமைச்சகத்தின் சிறப்பு அனுமதி பெறப்பட்டது. ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் தேவையான அனைத்து சிறப்பு ஏற்பாடுகளையும் செய்து இதற்கென்று வனத்துறைக்கு உதவியது.
கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் கன்னியாகுமரியிலிருந்து சாலை மார்க்கமாக வண்டலூர் அறிஞர் அண்ணா வனஉயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்ட கழுகு, 3ஆம் தேதி நேற்று சென்னை விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் ஜோத்பூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கூண்டில்போதிய காற்றோட்ட வசதியுடன், உயிருள்ள விலங்குகளை கொண்டு செல்வதற்கென்று உள்ள சர்வதேச விமான பயண நெறிமுறைகளுக்கு உட்பட்டு இந்த கழுகு கொண்டு செல்லப்பட்டது.
image

காற்றோட்ட வசதி, இடவசதியுடன் கொண்டு செல்வதற்கு ஏர் இந்தியா விமான பைலட்டுகள் பெறும் உதவி புரிந்தனர். இந்நிலையில் ஒக்கி கழுகு ராஜஸ்தானில் தனது வாழ்வியலோடு இணைந்து விட்டதாக தமிழ்நாடு கூடுதல் தலைமைச் செயலாளர் சுபிரியா சாகு தெரிவித்துள்ளார்.ராஜஸ்தானுக்கு கழுகு இடமாற்றம் செய்யப்பட்டு அதன் பயணத்தை அறிய ஜிபிஎஸ் டிரான்ஸ்மிட்டர் பொருத்தப்பட்டது.
கழுகு பறக்கும் பகுதிகள் டிராக் செய்யப்படுகிறது. உணவு இருப்பிடம் இனப்பெருக்கம் போன்றவை சரியாக நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க ஜிபிஎஸ் மூலம் டிராக் செய்யப்படுகிறது. புயலின் போது பாதிப்படைந்த கழுகு மீண்டும் அதன் வாழ்வியலோடு இணைக்க தமிழ்நாடு வனத்துறை எடுத்து வரும் முயற்சி முக்கியத்துவம் வாய்ந்தாக பார்க்கப்படுகிறது. அரிய வகை கழுகை பாதுகாக்க அதை இயற்கையோடு வாழ வைக்க தமிழ்நாடு வனத்துறை மற்றும் ராஜஸ்தான் வனத்துறை விமானத்துறை எடுத்த முயற்சிகள் நிச்சயமாக பாராட்டக் கூடியவை என சூழலியலாளர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.