பாட்னா: மாநிலத்தை ஆளத் தெரியாத வர் எப்படி பிரதமராகி நாட்டு மக்களுக்கு சேவையாற்ற முடியும் என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரிடம் பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்தபேட்டியில் மேலும் கூறியுள்ள தாவது:
மாநிலத்தைக்கூட நிர்வகிக்கத் திறனில்லாத பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கோரி அனைத்து கட்சிகளிடமும் கெஞ்சிவருகிறார். பிரதமர் மோடி தலைமையின் கீழ் நம் நாடு குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது. அதனை, நிதிஷ் குமாராக இருந்தாலும் சரி, வேறு எந்த தலைவராக இருந்தாலும் சரி தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.
பிரதமர் மோடியின் மீது நாட்டு மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதால் நிதிஷ் குமாரின் பிரதமராகும் கனவு ஒருபோதும் பலிக்காது.
பல்வேறு சிக்கல்கள்
நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி அரசியல் நம்பகத் தன் மையை அதிகரித்து வருகிறார். அதேநேரத்தில், நிதிஷ் குமாரால் அந்த மாநில மக்களிடையேகூட நம்பகத்தன்மையை உருவாக்கி காட்ட முடியவில்லை. அவர் ஆளுகையின் கீழ் உள்ள பிஹார் மாநிலத்தில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அவரது கட்சியும் குழப்ப நிலையில்தான் உள்ளது. காங்கிரஸைப் பொருத்த வரையில் எந்தவித முன்னேற்றமான வாய்ப் பையும் நிதிஷ் குமாருக்கு வழங்கவில்லை.
தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால்போல் நீங்களும் பிரதமர் ஆகிவிடலாம் என்ற நினைக்கிறீர்கள். அதுபோன்று ஒருபோதும் நடக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
கடுமையாக விமர்சனம்
மத்திய ஊரக வளர்ச்சி துறைஅமைச்சரும், பாஜக தலைவருமான கிரிராஜ் சிங், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்த நிலையில் தற்போது ரவிசங்கர் பிரசாத்தும் அதே பாணியில் கருத்தினை முன்வைத்துள்ளார்.
பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரை பாஜக தலைவர்கள் வரிசைகட்டி விமர்சித்து வரும் நிலையில், அவர் தனக்கு பிரதமர் பதவியின் மீது ஆசையில்லை என்று ஏற்கெனவே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.