ஈரோடு: “நடிகர்களுக்கு கூட கூட்டம் கூடும். ஆனால், யாரும் ஓட்டு போடமாட்டார்கள். அதுபோல கமல்ஹாசனை பார்க்க வருபவர்கள், அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள்” என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று (பிப்.20) பிரச்சாரம் மேற்கொண்டார். அண்ணாமலை பிள்ளை வீதியில் உள்ள பெண் வாக்காளர்கள் ஓரிடத்தில் ஒன்று கூடிய நிலையில், அவர்கள் மத்தியில் அமர்ந்து செல்லூர் ராஜூ திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, திமுக தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்தும், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தாலிக்குத் தங்கம் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் நிறுத்தப்பட்டது குறித்தும் திண்ணை பிரச்சாரத்தில் அவர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூவிடம், நடிகர் கமல்ஹாசனின் பிரச்சாரம் குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது: நாடு பாதுகாப்பற்ற தன்மையில் இருப்பதால், திமுக கூட்டணியை ஆதரிப்பதாக நேற்றைய பிரச்சாரத்தில் கமல்ஹாசன் பேசியிருக்கிறார். இன்று நாட்டில் பதட்டமான சூழ்நிலை இருக்கா? இந்த ஒரு தேர்தலால் பெரிய மாற்றம் வந்துவிடுமா? ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக கமல்ஹாசன் பேசியுள்ளார். நடிகர் பிரச்சாரத்திற்கு வந்தால் அவரைப் பார்க்க கூட்டம் கூடும். அவர் பேச்சை யாரும் கேட்க மாட்டார்கள். முந்தானை முடிச்சு படத்தில் வரும் சிரிப்பு நடிகர் தவக்களையை கூட்டிகிட்டு நாங்கள் ஓட்டு கேட்டபோது பெரும் கூட்டம் கூடியது. அவங்க தவக்களையை பார்த்தார்களே தவிர ஓட்டு போடவில்லை. அதேபோல குஷ்பு, வடிவேலு பிரச்சாரத்துக்கு வந்து ஓட்டு கேட்டாங்க.
ஆனால், யாரும் ஓட்டு போடலை. ஈரோடு மக்கள் விபரமானவங்க. எதையும் ஆராய்ந்து பார்க்கிறவங்க. எனவே, நல்ல தீர்ப்பை இந்த மக்கள் தருவார்கள். இந்த ஆட்சி வந்ததும் பல கட்டணங்களை உயர்த்தியுள்ளனர். மின்சாரம் ஒழுங்காக வரலை. ஆனால், மின்கட்டணத்தை உயர்த்தி விட்டனர். விலைவாசி உயர்ந்து விட்டது. ரேஷனில் பொருட்கள் கிடைப்பதில்லை என திண்ணை பிரச்சாரத்தில் மக்கள் என்னிடம் நேரடியாகச் சொல்கிறார்கள். ஈரோடு வாக்காளர்கள் விபரமானவர்கள். அவர்களை சரியான தீர்ப்பு வழங்குவார்கள். அதிமுக தொண்டர்கள் எழுச்சியாக தேர்தல் பணி ஆற்றுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.