விழுப்புரம் அன்பு ஜோதி இல்லத்தில் காணாமல் போனவர்கள் குறித்த வழக்கின் விசாரணை அறிக்கையை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அன்பு ஜோதி ஆசிரமத்தில் நடந்தது என்ன?
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்திற்கு உற்பட்ட குண்டலபுலியூர் கிராமத்தில் ஜூபின் பேபி என்பவர் அன்பு ஜோதி ஆசிரம் என்ற மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லத்தை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் திருப்பூரைச் சேர்ந்த சலீம்கான் என்பவர் அமெரிக்க செல்வதற்கு முன்பு அவரின் மாமா 70 வயது ஸிபீருல்லா-வை அன்பு ஜோதி ஆசிரமத்தில் சேர்த்துள்ளார். சலீம்கான் தனது நண்பர் ஹலிதீன் என்பவரிடம் மாமா ஸிபீருல்லா சந்தித்து நலம் விசாரித்து வரும்படி தெரிவித்துள்ளார்.
ஸபீருல்லா எங்கே?
இதனையடுத்து ஹலிதீன், அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு சென்ற போது ஸபீருல்லா அங்கு இல்லை என்பதும் அவரை பெங்களூருவில் உள்ள இல்லத்தில் உள்ளதாக தெரிவித்தனர். ஆனால் பெங்களூரு சென்று பார்த்ததில் ஸபீருல்லா இல்லை என தெரியவந்தது.
இதையடுத்து ஸபீருல்லாவை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோரி ஹலிதீன் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
காவல்துறைக்கு உத்தரவு!
அதில், ஸபீருல்லா குறித்த விபரங்களை சம்பந்தப்பட்ட அன்பு ஜோதி இல்ல நிர்வாகிகள் தர மறுப்பதாகவும், காவல்துறையில் புகார் அளித்தால் புகாரை ஏற்க மறுப்பதாகவும் கூறியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், விசாரணையின் குறித்த அறிக்கையையும் தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டது.
பலர் காணாமல் போனதாக புகார்!
அதன்படி காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த பலர் காணாமல் போனது தெரியவந்தது. மேலும் பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றது என புகார் வந்தது. இதனால் அன்பு ஜோதி இல்லத்தை நிர்வகித்து வந்த கேரளாவை சேர்ந்த ஜூபின் பேபி அவரது மனைவி மரியா ஜுபின் மற்றும் கோரளாவை சேர்ந்த மேலாளர் விஜி மோகன் மற்றும் தாஸ், விழுப்புரத்தை சேர்ந்த பூபாலன் தெலுங்கானாவைச் சேர்ந்த சதீஷ் உள்ளிட்ட 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பாலியல் கொடுமை!
விசாரணையில் இங்கு பராமரிக்கப்பட்டு வருபவர்களை அடித்து துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது உள்ளிட்ட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. இதையடுத்து 13 பிரிவுகளின் கீழ் இவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்தது காவல்துறை. இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.
இந்நிலையில், ஹலிதீன் தொடர்ந்த ஆட்கொணர்வு மனு நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் நிர்மல் குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத்தரப்பில், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், ஆசிரமத்தில் ஆய்வு செய்துள்ளதாகவும், ஜூபின் பேபி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய இரண்டு வாரம் கால அவகாசம் வேண்டும் என தெரிவித்தார்.
விசாரணை ஒத்திவைப்பு!
ஜூபின் பேபி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்டு ஜூபின் பேபியிடம் கேட்டு தெரிவிப்பதாக கூறினார். இதையடுத்து, வழக்கு குறித்த விசாரணை அறிக்கையை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை பிப்ரவரி 27ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.