ஜோலார்பேட்டை : திருப்பத்தூர் நகராட்சி பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட திருப்பத்தூர்- கிருஷ்ணகிரி சாலையில் உள்ள ஹவுசிங் போர்டு பகுதியில் வாகன போக்குவரத்துகள் அதிகமாக உள்ள நிலையில் பசு மாடுகளை அவற்றின் உரிமையாளர்கள் மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடுகின்றனர்.
இதனால், சாலைகளில் ஆங்காங்கே சுற்றித்திரிந்து, தெரு ஓரங்களில் பழ கழிவுகள், ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் வாழை இலைகள் விழுந்து கிடப்பதால் அவற்றை உண்பதற்காக சாலைகளில் பசு மாடுகள் செல்கின்றன. இதனால் சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணம் மேற்கொண்டு சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
மேலும் ஒரு சில சமயங்களில் பசுமாடுகள் திடீரென சாலையை கடக்கும் போது வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.