புதுடெல்லி: சிவ சேனா கட்சியின் பெயர், சின்னம் ஆகியவை ஏக்னாத் ஷிண்டே தரப்புக்கே சொந்தம் என்ற தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சிவ சேனா கட்சி இரண்டாக உடைந்து ஏக்னாத் ஷிண்டே ஒரு அணியாகவும், உத்தவ் தாக்கரே ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான அணியினர் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்ட்டிராவில் ஆட்சி அமைத்துள்ளனர். ஏக்னாத் ஷிண்டே முதல்வராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், மகாராஷ்ட்டிராவில் சின்ச்வாத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த லக்ஷ்மண் பாண்டுரங்க ஜக்தாப் மறைந்ததை அடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ள அதே பிப்ரவரி 27ம் தேதி சின்ச்வாத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
இரு அணியினரும் சிவ சேனாவின் வில் அம்பு சின்னத்திற்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்த நிலையில், ஏக்னாத் ஷிண்டே தரப்புக்கே அதிக எம்எல்ஏக்கள் இருப்பதால் அதற்கே வில் அம்பு சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் கடந்த 17ம் தேதி தனது முடிவை அறிவித்தது. உண்மையான சிவ சேனா ஏக்னாத் ஷிண்டே தலைமையில் இருப்பதுதான் என்ற தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரே உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை அவசர வழக்காகக் கருதி உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் இடம் கோரிக்கை வைத்தார். எனினும், அதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, வரிசைப்படி சீரான முறையிலேயே வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்றும் கூறினார். தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரே வழக்கு தொடுத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.