ராமநாதபுரம் மண்டபம் அருகே தலைப்பிரசவம் முடிந்து ஆட்டோவில் ஆண் குழந்தையோடு வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியதில் பச்சிளம் குழந்தை, தாய்-தந்தை மற்றும் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
மண்டபம் அருகே உள்ள வேதாளை சிங்கிவலை குப்பத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான சுமதி, தலைபிரசவத்திற்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டார்.
சிளம் குழந்தை மற்றும் திண்டுக்கல் நத்தம் பகுதியைச் சேர்ந்த டீ மாஸ்டரான தனது கணவர் சின்ன அடைக்கான், உறவினரான காளியம்மாள் ஆகியோருடன் ஆட்டோவில் வீட்டிற்கு வந்துகொண்டிருந்தார்.
வித்தானூரைச் சேர்ந்த மலைராஜ் ஓட்டிச்சென்ற ஆட்டோ மதுரை-தனுஸ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நதிபாலம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ராமேஸ்வரம் கோயிலுக்குச் சென்று விட்டு சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்த கார், முன்னால் சென்ற மற்றொரு காரை முந்திய போது, எதிரே வந்த ஆட்டோவின் மீது மோதியது.
இதில், ஆட்டோவிலிருந்து தூக்கி வீசப்பட்ட சுமதி, ஆட்டோ ஓட்டுநர் ஆகியோர் அதே இடத்தில் பலியாகினர். பலத்த காயமடைந்த மற்ற 3 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், குழந்தையும், தந்தை சின்ன அடைக்கானும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
காளியம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னையைச் சேர்ந்த கார் ஓட்டுநர் விக்னேஷை உச்சிப்புளி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தலைப்பிரசவத்திற்காக மருத்துவமனைக்குச் சென்ற தம்பதியினர் குழந்தையோடு சடலமாக வீடு திரும்பியது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.