திருச்சியில் காவலரை அரிவாளால் வெட்டிய ரவுடிகள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
திருச்சியில் பிரபல ரவுடி துரை என்பவரை இன்று காலை போலீசார் கைது செய்தனர். இவர்மீது 5 கொலை வழக்குகள் உட்பட 64 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். முக்கிய கொலை வழக்கான இளவரசன் என்பவரின் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான துரையை காவல்துறையினர் தேடிவந்தனர்.
இந்நிலையில் இன்று அவர் பிடிபட்டார். மேலும், இந்த கொலைவழக்கில் தொடர்புடைய துரையின் சகோதரரான சோமு என்பவரும் கைது செய்யப்பட்டார். இருவரிடமிருந்தும் ஆயுதங்கள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதுடன், ஜீப்பில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டனர். செல்லும் வழியில் எதிர்பாராதவிதமாக ரவுடிகள் காவல் வாகனத்தின் ஓட்டுநரின் கழுத்தை நெரித்ததால் ஜீப் நிலைதடுமாறி சாலையின் கீழ் இறங்கியுள்ளது.
அப்போது இருவரும் சிற்றரசு என்ற காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றுள்ளனர். உடனடியாக காவல் ஆயவாளர் மோகன் என்பவர் அவர் கையிலிருந்த துப்பாக்கியால் 3 ரவுண்டு ரவுடிகளின் காலில் சுட்டுள்ளார். தற்போது ரவுடிகள் இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியபிரியா சம்பவ இடத்தை ஆய்வுசெய்துவிட்டு, காயமடைந்த காவலரை மருத்துவமனையில் நேரில் சென்றுபார்த்து விசாரித்துவருகிறார். காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ரவுடிகள் துரை, சோமுவுக்கு முழங்கால், கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM