புதுடெல்லி: சிபிஎம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான டி.கே.ரங்கராஜனுக்கு, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரிலான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க உள்ளதற்கான அறிவிப்பினை பிரைம் பாயின்ட் ஃபவுண்டேஷன் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தன்னார்வ தொண்டு நிறுவனமான பிரைம் பாயின்ட் ஃபவுண்டேஷனின் நிறுவனர் மற்றும் தலைவரான பிரைம் பாயின்ட் கே.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: ”பிரைம் பாயின்ட் ஃபவுண்டேஷன் மற்றும் சன்சத் ரத்னா விருதளிப்புக் குழு ஆகிய தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து 13 ஆண்டு காலமாக சன்சத் ரத்னா விருது வழங்கும் விழாக்களை நடத்தி வருகின்றன. நாடாளுமன்ற இரு அவைகளிலும் மிகச் சிறந்த பங்களிப்பை அனைத்துத் துறைகளிலும் வழங்கி, அதிக மதிப்பெண் புள்ளிகளைப் பெற்றவர்களுக்கு அகில இந்திய அளவில் ‘சன்சத் ரத்னா’ எனும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.