கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டு நிறைவடையும் நிலையில், உக்ரைன் நாட்டுக்கு திடீர் பயணம் மேற்கொண்டு உலகையே, குறிப்பாக ரஷ்யாவை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்த வியூகம் வகுக்கும் சூழலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த திடீர் பயணத்தை மேற்கொண்டுள்ளார். 3 மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு ஒருமுறையாவது நேரில் வந்து நிலவரத்தை அருகிலிருந்து அறிந்து கொள்ள வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தார்.
கடந்த 15-ஆம் தேதி (பிப்.15) ஜெலன்ஸ்கி அளித்த ஒரு பேட்டியில், “நானும் அதிபர் பைடனும் சில முறை சந்தித்துள்ளோம். நான் அவரிடம் உக்ரைனுக்கு வருமாறு அழைப்புவிடுத்துள்ளேன். அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் உக்ரைன் வருவதற்கு அவரும் மகிழ்ச்சி அடைவர் என்றே நம்புகிறேன். அவர் அவ்வாறு வந்தால் அது எங்கள் தேசத்திற்கான அமெரிக்க ஆதரவை உலகிற்கு தெரிவிக்கும் மிகப் பெரிய சமிக்ஞையாக இருக்கும்” என்று கூறியிருந்தார். இந்நிலையில், இன்று (திங்கள்கிழமை) ஜோ பைடன் உக்ரைனுக்கு திடீர் விசிட் அடித்துள்ளார்.
அதிபர் பைடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தபோது அவருடன் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலீனாவும் இருந்துள்ளார். வரும் 24-ஆம் தேதியுடன் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டு நிறைவடைகிறது.
அள்ளிக் கொடுத்த பைடன்: இந்த எதிர்பாராத பயணத்திபோது உக்ரைனுக்கு பல்வேறு உதவிகளை அறிவித்துள்ளார் ஜோ பைடன். ராணுவ தளவாடங்கள், குறிப்பாக உக்ரைன் நீண்ட நாட்களாக கேட்டுவந்த ஹோவிட்சர், ஜாவ்லின் ஆயுதங்கள் தொலைதூரம் சென்று தாக்கும் ஆயுதங்கள் ஆகியனவற்றை வழங்குவதாக அறிவித்துள்ளார். அரை பில்லியன் டாலர் அளவிலான உதவிகளை அவர் அறிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கு பகிரங்க எச்சரிக்கை: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யா மீது புதிதாக பல்வேறு தடைகளை அறிவித்துள்ளார். அவரது பயணம் குறித்து பைடன், “உக்ரைன் மீது ரஷ்யா கொடூர தாக்குதலைத் தொடங்கி ஓராண்டைக் காணவுள்ள நிலையில் நான் இன்று கீவ் நகரில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை காணவந்துள்ளேன். இது எதற்காக என்றால் உக்ரைன் அதன் ஜனநாயகம், இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடை பேண அமெரிக்கா உதவி தொடர்கிறது என்பதை வலியுறுத்திச் சொல்லிக் காட்டவே.
ஓராண்டுக்கு முன் புதின் உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கியபோது உக்ரைன் வலுவற்றது, மேற்குலகம் பிரிந்துகிடக்கிறது என்று நினைத்தார். எங்களை வீழ்த்த முடியும் என நினைத்தார். ஆனால், அவர் அவ்வாறாக நினைத்தது மிகப் பெரிய தவறு” என்று கூறியுள்ளார். இதனை வெள்ளை மாளிகை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திக் கட்டுரை > மூன்று வெவ்வேறு பாதைகளில் பயணிக்கும் உக்ரைன் – ரஷ்யா போர்: ஒரு தெளிவுப் பார்வை