புனேவை சேர்ந்த ஆஷாயா என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று தூக்கியெறியப்பட்ட சிப்ஸ் பாக்கெட் கவர்களை மறுசுழற்சி செய்து சன்கிளாஸ்களை தயாரித்துள்ளது.
ஆஷாயா நிறுவனத்தைத் தொடங்கிய அனிஷ் மல்பானி, ட்விட்டர் பக்கத்தில் மறுசுழற்சி செய்யப்பட்ட சன்கிளாஸ்களை அறிமுகப்படுத்தினார். இந்த சன்கிளாஸ்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்ற மேக்கிங் வீடியோவையும் பதிவிட்டு இருந்தார்.
அதில், “சிப்ஸ் பாக்கெட் மட்டுமல்ல, மறுசுழற்சி செய்யமுடியாத சாக்லேட் கவர்கள், பால் கவர்கள் போன்ற பிளாஸ்டிக் கவர்களையும் நாங்கள் மறுசுழற்சி செய்கிறோம். எப்படி மறுசுழற்சி செய்யலாம் என்பது குறித்த ஆய்வை கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கொண்டு, இதைக் கண்டறிந்தோம். அதன்பிறகு வழிமுறையை கண்டறிந்து தற்போது கண்ணாடியை உருவாக்கியுள்ளோம்” என்றார்.
மேலும், “சிப்ஸ் பாக்கெட் கவர்களில் இருந்து தயாரிக்கப்பட்ட உலகின் முதல் மறுசுழற்சி செய்யப்பட்ட சன்கிளாஸ்களை இங்கே இந்தியாவில் வழங்குகிறோம்.
இதில் கிடைக்கும் தொகையைத் தூய்மை பணியாளர்களுக்கும், அவர்களது பிள்ளைகளின் கல்வி செலவிற்கும் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். எனவே இந்த சன்கிளாஸ்களை அணிந்து கொள்ளுங்கள். நீங்கள் வெறும் சன்கிளாஸ்களை அணியவில்லை. மாற்றத்தை அணிந்திருக்கிறீர்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.
ஆஷாயா நிறுவனத்தின் இந்த முயற்சிக்குப் பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.