பெங்களூரு – மைசூரு சாலை விரிவாக்கப்பணியால் அவதி எனப் புகார்: சாலையை கடக்க சுரங்கப்பாதை அமைத்துத் தர மக்கள் கோரிக்கை

கர்நாடகா: பெங்களூருவில் நெடுஞ்சாலையை கடக்க சுரங்கப்பாதை அமைத்து தரக்கோரி மாட்டு வண்டியுடன் சாலை மறியலில் ஈடுப்பட்ட விவசாயிகள் தடியடி நடத்தி கலைக்கப்பட்டனர். மாண்டியா மாவட்டத்திற்கு உட்பட்ட பெங்களூரு – மைசூரு தேசிய நெடுஞ்சாலை ஓரம் ஹனகரை என்ற கிராமம் உள்ளது. தற்போது இந்த நெடுஞ்சாலையை 10 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், கிராம மக்கள் பல கிலோமீட்டர் சுற்றிக்கொண்டு கிராமத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பயண சுமையை குறைக்கும் விதமாக சுரங்கவழிப் பாதையை அமைத்து தரவேண்டும் என்று கிராம மக்கள் பலமாதங்களாக கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால், அதிகாரிகள் கண்டுகொள்ள வில்லை என தெரிகிறது.

இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள் நெடுஞ்சாலையை டிரக்டர்கள் மற்றும் மாட்டு வண்டிகள் கொண்டு முடக்கினர். அதுமட்டுமின்றி நெடுஞ்சாலையில் கூடாரம் அமைத்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், வாகனங்கள் நீண்ட வரிசையில் வரிசை கட்டி நின்றன. வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகினர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவர்களை சமரசம் செய்ய முயன்றும் விவசாயிகள் தங்களது புகாரை மனுவாக அளித்தனர். இதையடுத்து அங்கு விரைந்த நெடுஞ்சாலை அதிகாரிகள் சுரங்கப்பாதைக்கு சாத்தியமில்லை என திட்டவட்டமாக தெரிவித்தனர். இருப்பினும் விவசாயிகள் போராட்டத்தை கைவிட மறுத்ததால் போக்குவரத்தை சரிசெய்யும் விதமாக தடியடி நடத்தி அவர்கள் கலைக்கப்பட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.