இந்தியாவின் மிகப்பெரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அதன் மிகப்பெரிய ஜிகா தொழிற்சாலையை தமிழ்நாட்டில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அமைத்துள்ளது.
இங்கு உருவாக்கப்படும் ஓலா ஸ்கூட்டர்கள் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில் மீண்டும் ஒரு 7600 கோடி ரூபாய் முதலீடு செய்து புதிய தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய முதலீடு மூலமாக ஓலா கார்கள், பேட்டரி போன்றவை உருவாக்கப்படும். இதற்கான ஓப்பந்தம் சமீபத்தில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினுடன் ஏற்பட்ட சந்திப்பில் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதில் பேட்டரி உருவாக்கவே 5 ஆயிரம் கோடி செலவாகும் என்றும் எலக்ட்ரிக் கார் தயாரிக்க 2500 கோடி ரூபாய் செலவாகும் என்றும் தெரிகிறது.
இவை இரண்டும் தற்போது இருக்கும் ஓலா தொழிற்சாலைக்கு அருகிலேயே தொழிற்சாலை அமைத்து உற்பத்தி செய்யப்படவுள்ளன. ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தற்போது இந்தியாவின் நம்பர் 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனமாக உள்ளது. மாதம் சுமார் 20 ஆயிரம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்த நிறுவனம் விற்பனை செய்கிறது.
இந்தியாவை விரைவில் முழு எலக்ட்ரிக் வாகன நாடாக மாற்ற ஓலா இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்காக இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் என பலவற்றை பலவகையான மாடல்களில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அந்த நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.
முக்கியமாக இந்தியாவிலேயே அனைத்து உதிரிபாகங்களையும் உற்பத்தி செய்து அதன் வாகனங்களில் பயன்படுத்த ஓலா திட்டம் வைத்துள்ளது. அதன் மூலமாகவே இந்த புதிய தொழிற்சாலைகள் அமைக்க ஓலா முடிவெடுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்