தெலுங்கில் ஒன்றாக இணையும் தயாரிப்பாளர் சங்கங்கள்?
தெலுங்குத் திரையுலகத்தில் தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், ஆக்டிவ் தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் என இரண்டு முக்கிய சங்கங்கள் உள்ளன. தொடர்ந்து படங்களைத் தயாரித்துக் கொண்டிருப்பவர்கள் இணைந்து ஆக்டிவ் சங்கத்தை உருவாக்கினார்கள். அந்த சங்கத்தில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களைச் சேர்ந்த 76 தயாரிப்பாளர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
இந்நிலையில் தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு 2023 முதல் 2025 வரையிலான நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்தத் தேர்தலில் 'வாரிசு' படத் தயாரிப்பாளரான தில் ராஜு ஆதரவுடன் ஒரு குழுவும், தயாரிப்பாளர் கல்யாண் ஆதரவுடன் மற்றொரு குழுவும் களத்தில் இறங்கின. இதில் தில் ராஜு ஆதரவிலான குழுவினர்தான் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளார்கள்.
தலைவராக தாமோதர் பிரசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 15 செயற்குழு உறுப்பினர்களில் தில் ராஜு அதிகபட்சமாமக 470 வாக்குகளை வாங்கியுள்ளார். இதுவரை நடைபெற்ற தேர்தலில் ஒருவர் வாங்கிய அதிகபட்சமான வாக்குகள் இதுதானாம். தலைவர் பதவிக்குத் தேர்வானவருக்குக் கூட 339 வாக்குகள் பெற்றுதான் தலைவர் ஆகியிருக்கிறார்.
இந்நிலையில் ஆக்டிவ் தயாரிப்பாளர் சங்கத்தை, தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துடன் இணைப்பதற்காக விதிகளை மாற்றவும் முடிவு செய்துள்ளார்களாம்.
தமிழ்த் திரையுலகத்திலும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் என ஒரு சங்கமும், ஆக்டிவ் தயாரிப்பாளர் சங்கம் என இன்னொரு சங்கமும் இயங்கி வருகிறது. தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு மார்ச் மாதம் 26ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குப் பிறகு இங்கும் இரண்டு சங்கங்களும் இணையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.