Vaathi Collection: வாயை பிளக்கவைக்கும் வாத்தி வசூல்… வார இறுதி விவரம்!

Vaathi Collection Worldwide: தெலுங்கு திரையுலகில் பல திரைப்படங்களை எடுத்து, வெற்றி இயக்குநராக விளங்கும் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ், நடிகை சம்யுக்தா நடித்த வாத்தி திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை (பிப். 17) அன்று வெளியானது. 

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் தயாரானது. ‘Sir’என்று பெயரிடப்பட்டு தெலுங்கு வெர்ஷன், தமிழில் வெளியான அதே நாளில் உலகெங்கும் வெளியானது. இப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இப்படம் வெளிவருவதற்கு முன்பே, பாடல்கள் வைரல் ஹிட் அடித்திருந்தது. எனவே படத்தின் மீது எதிர்பார்ப்பு இருந்தது. 

வசூல் விவரம்

கூடவே தனுஷின் கடந்த திரைப்படமான திருச்சிற்றம்பலம், குடும்பங்களை அதிகம் ஈர்த்ததால், திரையரங்கில் மாதக்கணக்கில் ஓடி வெற்றி பெற்றிருந்தது. எனவே, இயல்பாகவே வாத்தி படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்தது. 

அந்த வகையில்தான், படத்தின் முதல் நாள் வசூல் இருந்தது எனக் கூறலாம். ஒட்டுமொத்தமாக முதல் நாளில் ரூ. 14 கோடி, இரண்டாம் நாளில் ரூ. 20 கோடியை வசூலித்ததாக கூறப்பட்ட நிலையில், நேற்றைய மூன்றாவது நாள் நிலவரப்படி, படம் ரூ. 50 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

மூன்று நாள்களில் இந்திய முழுவதும் வாத்தி/Sir படம் ரூ. 33 கோடியை வசூலித்துள்ளதாகவும், வெளிநாடுகளின் வசூலை சேர்த்து மொத்தம் ரூ. 50 கோடியை படம் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு படக்குழுவுக்கு கைக்கொடுத்துள்ளதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. 

போட்டிக்கு வந்த செல்வராகவன்

ஆக்ஷன் பாணியில் உருவான இப்படத்தில் கல்லூரி விரிவுரையாளராக தனுஷ் நடித்துள்ளார். பணத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கல்வி நிறுவனங்களை எதிர்ப்பவராக பாலமுருகன் என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் கலக்கியிருக்கிறார் என கூறப்படுகிறது. அந்த கல்வி நிறுவனங்களை எதிர்த்து போராடி, அவர் வெற்றி பெறுகிறாரா இல்லையா என்பதுதான் மீதிக்கதை. 

இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கலவையான விமர்சனத்தை பெற்றது. மேலும், வாத்தி படத்துடன் செல்வராகவன் நடிப்பில், மோகன்.ஜி இயக்கத்தில் உருவான பகாசூரன் படமும் வெளியாகியிருந்து. மேலும், கடந்த வாரம் வெளியான டாடா திரைப்படமும் திரையரங்கில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால், வாத்தி படத்தின் வசூல் குறித்து பல கேள்விகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.