பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்- மு.க.அழகிரி சந்திப்பு: மீண்டும் மதுரை திமுகவில் கலகல!

மதுரையில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், முன்னாள் ஒன்றிய அமைச்சர் மு.க.அழகிரி சந்தித்த நிகழ்வு அரசியல் அரங்கில் கவனம் பெற்று வருகிறது.

திமுகவிலிருந்து அழகிரி நீக்கப்பட்டதிலிருந்து அவரது ஆதரவாளர்களும் கட்சிக்குள் ஓரங்கட்டப்பட்டார்கள். இதனால் அழகிரி ஆதரவாளர்கள் பலர் ஒதுங்கிக்கொண்ட நிலையில் சிலர் ஸ்டாலின் ஆதரவாளர்களாக மாறினர்.

கலைஞர் மறைவுக்குப் பின்னர் ஸ்டாலின் கட்சியின் தலைவரான பின்னர் திமுகவை நேரடியாக விமர்சித்து வந்தார் அழகிரி. ஒரு கட்டத்தில் அவர் தனியாக கட்சி தொடங்க உள்ளதாகவும் வதந்திகள் பரவின. ரஜினிகாந்துக்கு ஆதரவாக பேசி வந்த அழகிரி தேர்தல் முடிவுக்குப் பின்னர் அமைதியானார். ஸ்டாலின் அமைச்சரவை பதவியேற்பு விழாவுக்கு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் தனது மகன் துரைதயாநிதியை மட்டும் அனுப்பிவைத்தார்.

ஸ்டாலின் – அழகிரி இடையே கருத்துவேறுபாடுகள் நீங்கி சுமுக உறவு நிலவுவதாக கூறப்பட்டது. ஆனாலும் இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை. இந்த சூழலில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்ற பின்னர் மதுரை சென்று அழகிரியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அந்த சந்திப்புக்கு பிறகு அழகிரி ஆதரவாளர்கள் குஷியானார்கள். மீண்டும் கட்சிக்குள் ஒரு ரவுண்டு வரலாம் என்று கணக்கு போட்டனர்.
திமுக
தலைமையும் அழகிரிக்கு கிரீன் சிக்னல் காட்டிவிட்டதாகவே மதுரை உடன்பிறப்புகள் கூறுகின்றனர்.

மதுரையில் எஸ்.ஆர் கோபியின் மகள் திருமண விழா நடந்தது. இந்த திருமண விழாவில் கலந்து கொள்வதற்கு விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பல்வேறு பணிகள் காரணமாக அவர் செல்ல முடியாமல் போக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

நிகழ்வில் கலந்துகொள்ள அழகிரியையும் எஸ்.ஆர் கோபி அழைத்திருந்தார். பிடிஆர் இருக்கும் போது அங்கு வந்த மு.க.அழகிரி அவரிடம் நலம் விசாரித்தார். அமைச்சர் பிடிஆரும் அழகிரியிடம் நலம் விசாரித்தார். இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டனர்.

உதயநிதி வந்து பேசிப்போன பின்னரே அமைச்சர் பிடிஆர்- மு.க.அழகிரி சந்திப்பு சாத்தியமாகியுள்ளது. அழகிரி கட்சிக்குள் என்ட்ரி கொடுக்க தயாராகிவிட்டதையும், அதற்கு ஸ்டாலின் தரப்பு தலையசைத்துவிட்டதாகவும் இல்லையென்றால் இப்படி சந்திப்பு நடைபெற வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள்.

நீதிக்கட்சி காலத்திலிருந்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் குடும்பத்தினர் தமிழ்நாட்டில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளனர். அந்த வகையில் சபாநாயகராக இருந்த பிடிஆரின் தந்தை பழனிவேல் ராஜனுக்கும், மதுரையில் அந்த சமயம் கோலோச்சுக்கொண்டிருந்த அழகிரிக்கும் பனிப்போர் நிலவியதாக சொல்கிறார்கள். தற்போது பிடிஆரின் செயல்பாட்டை அழகிரி பாராட்டி அவரிடமே கூறியுள்ளார். அரசியலில் தான் காட்சிகள் எவ்வளவு சீக்கிரமாக மாறுகின்றன!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.