சென்னை: தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கும் வரை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் தாக்கல் செய்த மனுவில், ‘தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு சட்டங்கள் உள்ளன. ஆனாலும் வாக்களர்களுக்கு பணம் விநியோகிப்பது தொடர்கிறது. இதனை தடுக்க தேர்தல் ஆணையம் போதுமான நடவடிக்கைகளை எடுப்பது இல்லை.
ஒவ்வொரு தேர்தலின் போதும், பணம் கொடுத்து வாக்கு வாங்கப்படுகிறது. இதுபோன்ற தவறிழைப்பவர்கள் தண்டிக்கப்படுவதில்லை. எனவே, தேர்தல் முறைகேடுகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரிகள், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் கொண்ட குழு அமைக்க வேண்டும்.
இதுதொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு மனு அனுப்பினேன். அந்த மனுவுக்கு இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. எனவே தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க உத்தரவிட வேண்டும். அதுவரை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும்’ என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முறைகேடுகளை தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது” என்ற தேர்தல் ஆணையத்தின் அறிக்கையை ஏற்று, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது. அதன் விவரம்: ஈரோடு கிழக்கில் முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கைகள் என்னென்ன? – உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்