கோவை அருகே, இறந்த மனைவியின் நினைவாக சிலை வைத்து, தினமும் பூஜை செய்து வரும் கணவனின் செயல்பாடு, காண்போரை நெகிழச் செய்வதாக உள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே அமைந்துள்ளது சிறுமுகை பகுதி. அங்குள்ள கணேசபுரத்தை சேர்ந்தவர், 75 வயது பழனிச்சாமி. தனக்கு சொந்தமான தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவரின் மனைவி சரஸ்வதி. இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
திருமணத்திற்குப் பின்னர் ஒருவருக்கொருவர் நல்ல புரிந்துணர்வோடு அன்பு காட்டி, விட்டுக்கொடுத்து வாழ்ந்து வந்தனர் பழனிச்சாமி – சரஸ்வதி தம்பதி. இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் மனதிற்கு நிறைவாக விவசாயத்தை இருவரும் இணைந்து தங்கள் நிலத்தில் செய்து வந்தனர். இவர்களிடையே பெரும்பாலும் சண்டை ஏதும் வந்ததில்லை என்கிறார்கள் சுற்றத்தினர்.
இந்நிலையில், 2019 ஜனவரி 21 அன்று, தோட்டத்தில் பணியை முடித்துவிட்டு குளிக்கச் சென்ற சரஸ்வதி மயங்கி விழுந்து உயிரிழந்தார். இச்செய்தியை அறிந்து துடித்துப்போன பழனிச்சாமி, தன் மனைவியை பிரிய மனமில்லாமல், அவரது உடலை தனது தோட்டத்திலேயே அடக்கம் செய்தார். மனைவியின் நினைவை போற்றும் வகையில், தோட்டத்தில் ஒரு நினைவு மண்டபம் கட்ட முடிவெடுத்தார் பழனிச்சாமி. திட்டமிட்டபடியே, சரஸ்வதியை அடக்கம் செய்த இடத்திலேயே நினைவு மண்டபத்தை எழுப்பினார். மண்டபத்தில், சரஸ்வதியின் சிலை ஒன்றையும் அமைத்தார். தினமும் காலை மற்றும் மாலை இருவேளையிலும் பழனிச்சாமி தன் மனைவியின் சிலைக்கு பூஜை செய்து வழிபட்டு வருகிறார்.
இது குறித்து பழனிச்சாமி பேசுகையில், “எங்களுக்குள் சண்டையோ கருத்து வேறுபாடு வந்ததில்லை. இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம். சரஸ்வதி திடீரென உயிரிழந்தது, என்னை நிலைகுலையச் செய்தது. அவரது நினைவாக நினைவு மண்டபம் ஒன்றை அமைத்துள்ளேன். வெளியூர் சென்றுவிட்டால், பூஜை செய்ய முடியாது என்பதால், வெளியூர் பயணத்தை முற்றிலுமாக தவிர்த்து விட்டேன். மனைவியின் மறைவுக்குப் பிறகு அவரின் நினைவுகளுடன் வாழ்வதற்கு பதில் ஒவ்வொருவரும் மனைவி தன்னுடன் வாழும்போதே அவரை நேசித்து பாசம் காட்ட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்” என்றார்.
அன்பு அழகு… இன்மையிலும்!