மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே எடையூர் ஊராட்சி பகுதிகளில் திறந்தநிலை மழைநீர் கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் கொசுக்கள் அதிகரித்து, அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்தொற்றுகள் பரவும் அபாயநிலை உள்ளது. அவற்றை அகற்றி, கால்வாயின்மீது மூடி அமைத்து முறையாக பராமரிக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே எடையூர் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளிலும் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.
இப்பகுதிகளில் தினசரி குப்பைகள் அள்ளுவதற்கு சில ஊழியர்களை மட்டுமே ஊராட்சி நிர்வாகம் ஒப்பந்த அடிப்படையில் நியமித்துள்ளது. இவர்களால் அனைத்து வார்டு பகுதிகளிலும் முறையாக குப்பைகள் அகற்ற முடியவில்லை. மேலும், எடையூர் ஊராட்சியின் பல்வேறு சாலைகளை ஒட்டியபடி மழைநீர் வெளியேறுவதற்கு திறந்தநிலை கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த திறந்தநிலை கால்வாயில் குப்பை கழிவுகளால் கழிவுநீராக மாறியுள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் அடைப்புகள் ஏற்பட்டு, அப்பகுதி சாலைகளில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதையடுத்து அந்தந்த வார்டு பகுதி மற்றும் மருத்துவமனை அருகே கால்வாய்களில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் அப்பகுதி மக்களுக்கு மர்ம காய்ச்சல்கள் மற்றும் பல்வேறு நோய்தொற்றுகள் பரவும் அபாயநிலை ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எடையூர் ஊராட்சி பகுதிகளில் குப்பைகளை முறையாக அகற்ற கூடுதல் ஊழியர்கள் நியமிக்கவும், அங்கு திறந்தவெளி கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றி, அக்கால்வாய்மீது மூடி அமைத்து பராமரிக்க மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.