“காலையில் மதுரையில் தயாராகும் போளி, மாலை கத்தாரிலுள்ள சூப்பர் மார்க்கெட்களில் சுடச்சுட கிடைக்கப் போகிறது. நாங்கள் தேங்காய் போளி, பருப்பு போளி, முந்திரி போளியை இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு கொரியர் மூலம் அனுப்புகிறோம்’’ என்கிறார்கள் மதுரை ‘புளியடீஸ்’ போளி நிறுவனத்தினர்.
போளி தயாரிப்பிலேயே தங்களுக்கென தனிப் பெயருடன் விளங்குறது புளியடீஸ் போளி. மதுரை மஹால் அருகில் உள்ள அவர்களின் நேரடி விற்பனையகத்துக்குச் சென்றபோது, பலரும் போளி வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்ததனர். புளியடீஸ் போளி நிறுவனத்தை நடத்திவரும் மூன்றாவது தலைமுறை இளைஞர் பாலாஜி, தங்கள் குடும்பத் தொழிலைப் பற்றி நம்மிடம் சுவாரஸ்யமாக எடுத்துச் சொன்னார்.
‘‘என் பாட்டி ரத்தினம்மாளுக்கு எட்டு பெண், ஒரு ஆண் என மொத்தம் ஒன்பது பிள்ளைகள். அந்த ஒரு ஆண்தான் எங்கப்பா. என் தாத்தா ரங்காச்சாரி வேலை பார்த்த கம்பெனியைத் திடீரென்று மூடிவிட்டதால், குடும்பம் ரொம்ப சிரமப்பட்டுள்ளது. அப்போதுதான் குடும்ப சுமையைக் குறைக்க போளி வியாபாரத்தை பாட்டி தொடங்கியிருக்காங்க. அப்பவே பாட்டியோட கைப்பக்குவம், நல்ல சுவையும், அவங்களோட அர்ப்பணிப்பும் வாடிக்கையாளர்களை உருவாக்கி வியாபாரத்தை பெருக்கியுள்ளது.
மதுரையில் செளராஷ்ட்ரா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் குடும்பப் பெயர் உண்டு. எங்களின் குடும்பப் பெயர் புளியடி. எங்கள் குடும்பத்தின் பெயரையே எங்கள் போளி கடைக்கும் மக்கள் வைத்து அழைக்கத் தொடங்கினார்கள். அதனால் புளியடீஸ் போளி என்கிற பெயர் நிலைத்து நின்றது.
1967-ல் பெரிய குடும்பத்தைக் காப்பாற்ற 50 ரூபாய் முதலீட்டில் என் தாத்தா ரங்காச்சாரியும், பாட்டி ரத்தினம்மாளும் வீட்டிலேயே போளி தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கினார்கள்.
அதில்வந்த வருமானம் மூலம் பிள்ளைகளைப் படிக்க வைத்து, திருமணம் செய்துகொடுத்தார்கள். அத்தைகள் வீட்டில் இருந்தபோது எல்லோருமே பாட்டிக்கு உதவியாக இருந்தார்கள். திருமணம் செய்து ஒவ்வொரு அத்தையும் போனபின்பு எங்கம்மாதான் பாட்டியுடன் சேர்ந்து வியாபாரத்தைப் பார்த்தாங்க. பாட்டிக்கு வயசானதும் மில்லில் வேலை பார்த்துட்டு இருந்த என் அப்பா சுப்பிரமணியன், 1994-ல இந்த பிசினஸுக்குள்ள வந்தார்.
அப்பல்லாம் மதுரையில உள்ள சினிமா தியேட்டர்ல எங்க போளிக்கு ரொம்ப டிமாண்ட். தொடர்ந்து போளிகளைத் தயாரிச்சு தியேட்டர்களுக்கு அனுப்பிக்கிட்டே இருந்திருக்காங்க. அப்புறம் காலமாற்றத்தால் கொஞ்சம் கொஞ்சமா தியேட்டர்களுக்குக் கூட்டம் குறைய ஆரம்பித்ததும் அப்பா டிரெண்டை மாற்றி போளியை வாடிக்கையாளர்கள் வீடுகளுக்கு சென்று கொடுக்கவும், பெரிய சைஸ் போளி, வெரைட்டி போளிகளையும் தயாரிக்க ஆரம்பித்தார். அது பல ஆயிரம் புதிய வாடிக்கையாளர்களைக் கொண்டுவந்தது.
2017-ல அப்பா இறந்துவிட்டார். அதற்குப்பின் என் அம்மா மட்டும் கஷ்டப்பட்டு போளி வியாபாரத்தைப் பார்த்துக்கொண்டார். அந்த சமயம், நான் எம்.இ முடிச்சுட்டு ஒரு கம்பெனியில 10 வருடம் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். நம்ம குடும்பத்தோட போளித் தொழிலுக்கு நல்ல பேர் இருக்கிறது. பெரிய கஸ்டமர் பேக் ரவுண்ட் அமைந்திருக்கிறது. நல்ல வருமானம் வருகிறது. இந்த மாதிரி வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது, நாம ஏன் குடும்பத் தொழிலை செய்யக் கூடாதுன்னு எண்ணம் வந்தது. அது மட்டுமின்றி, 60 வருடமா புளியடீஸ் போளிங்கிற பிராண்டை உருவாக்கிவிட்டு போயிருக்கிறார்கள். அதை அப்படியே விட்டுடக் கூடாதுன்னுதான் முதல்ல இரண்டு வருடம் வேலையும் பார்த்துட்டு வியாபாரத்தையும் பார்த்துட்டு வந்தேன். அப்புறம் 2019-ல முழுமையா வியாபாரத்துல இறங்கிட்டேன்.
நிறைய பேர் ஏன் நல்ல வேலையை விடுறேன்னு கேட்டார்கள். படிச்ச படிப்புக்கான வேலையை எப்படி வேணாலும் மீண்டும் தேடிக்கலாம். ஆனால், 60 வருடம் நல்ல பவுண்டேசனோட சிறப்பா உருவாக்கி வச்சுட்டு போன பிசினஸை ஒரு நாள் விட்டாலும், திருப்பிக் கஸ்டமரைக் கொண்டு வரமுடியாது. அதனால பிசினஸைக் கவனிக்க ஆரம்பித்தேன்.
எங்கள் போளிகளுக்கு நல்ல பேர் இருக்கு; ரெகுலர் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள் ஏன் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போகக்கூடாதுன்னு ஆர்வம் ஏற்பட்டது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமா தொழிலை நவீனப்படுத்தி விரிவுபடுத்தினோம்.
சின்ன வயசுலருந்தே பார்த்துட்டு வர்ற தொழில் என்பதாலும், அதுவே எங்கள் வாழ்வாதாரத்தை மாற்றியது என்பதாலும் முழு ஈடுபாட்டோடு செயல்பட்டோம். 20 ரூபாயிலிருந்து 60 ரூபாய் வரைக்கும் பல வகையான போளிகளைத் தயாரிக்கிறோம். லாபத்துக்காக எந்த வகையிலும் சமரசம் செய்துகொண்டதில்லை. தரமான பொருள்கள், நெய் எண்ணெய், பயன்படுத்துகிறோம். சுத்தமாகவும், ரசாயனங்கள் இல்லாமலும் தயாரிக்கிறோம். நாங்கள் தயாரிக்கும் போளி 15 நாள் வரை கெட்டுப் போகாமல் அதே தன்மையுடன் இருக்கும். இதற்காக உணவு பாதுகாப்புத் துறை, உணவுத் தர பரிசோதனை நிறுவனங்களில் சான்றிதழ் பெற்றிருக்கிறோம்.
இன்று மதுரையிலுள்ள பெரிய ஹோட்டல்களில் எங்களுடைய போளிகள்தான் வழங்குகிறார்கள். மதுரைக்குள் போன் மூலம் ஆர்டர் செய்கிறவர்களுக்கு நேரடியாக சுடச்சுட டெலிவரி செய்கிறோம். இந்தியா முழுவதும் தரமான பேக்கிங்கில் கொரியர் பார்சல் மூலம் டெலிவரி செய்கிறோம். எங்களுடைய வேன் ஷாப் மூலம் மதுரையிலுள்ள அபார்ட்மெண்டுகளுக்கு மட்டும் சென்றுகொண்டிருக்கிறோம்.
வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் பக்காவான பேக்கிங்கில் எங்கள் போளிகளை எடுத்துச் செல்கிறார்கள். கத்தாருக்கு ஒரு நிறுவனத்தின் மூலம் எக்ஸ்போர்ட் செய்கிறோம். விரைவில் நேரடியாக பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளோம். இந்தத் தொழிலை விரிவுபடுத்தி நிறைய கிளைகளோடும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தும் அதிகமான பேருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய எதிர்காலத் திட்டம்.
குடும்பத் தொழிலில் குடும்பத்தினர் அனைவரும் பங்கு பெற்றால் சிறப்பாக இருக்கும் என்பதை எங்கள் பாட்டி காட்டிவிட்டு போயுள்ளார். அதை நடைமுறைப்படுத்தி வருகிறோம். என்னோடு என் மனைவியும் இந்தத் தொழிலில் எனக்கு உதவி வருகிறார். புளியடீஸ் போளி சுவையான, உடலுக்கு தொந்தரவு தராத, வெளிநாட்டினரும் பாராட்டக்கூடிய வகையில் எப்போதும் இருக்கும்” என்றார்.
1967-ல் இருவருடன் ஆரம்பித்த புளியடீஸ் போளி இன்றைக்கு 50 பேர் வேலை செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. உள்ளூர் விற்பனையைத் தாண்டி ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது!