முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோயில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேஷ நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து சுவாமி தரிசனம் பெற்றுச் செல்கிறார்கள். மற்ற கோயில்களில் ஆண்டுக்கு ஒருமுறைதான் பிரம்மோற்சவம் நடக்கும். ஆனால், இங்குதான் ஆவணித்திருவிழா மற்றும் மாசித்திருவிழா என ஓர் ஆண்டில் இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன.
ஆவணித்திருவிழா தேய்பிறை நாள்களிலும், மாசித்திருவிழா வளர்பிறை நாள்களிலும் நடைபெறும். ஆவணித் திருவிழாவில் சிறிய தேரில் சுவாமி குமரவிடங்கப் பெருமானுடன் வள்ளியம்பிகையும், மாசித்திருவிழாவில் பெரிய தேரில் சுவாமியுடன் தெய்வானை அம்பிகையும் வலம் வருவர். இங்கு ஆண்டு தோறும் நடக்கும் முக்கியத் திருவிழாக்களில் மாசிப் பெருந்திருவிழா மிகவும் சிறப்பானது.
இந்தாண்டு மாசித் திருவிழா, வரும் 25-ம் தேதி காலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதிகாலை 1 மணிக்குக் கோயில் நடை திறக்கப்படும். 7-ம் நாள் திருவிழா நாளான மார்ச் 3-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி – தெய்வானையுடன் எழுந்தருளும் உருகு சட்ட சேவையும், காலை 9 மணிக்கு சுவாமி வெட்டிவேர் சப்பரத்தலும், அன்று மாலை 4.30 மணிக்கு சிவப்பு சாத்தி கோலத்திலும் எழுந்தருளி 8 ரத வீதிகளிலும் உலா வருதல் நடைபெறும்.
8-ம் நாள் திருவிழாவான மார்ச் 4-ம் தேதி காலை 9 மணிக்கு வெள்ளை சாத்தி அலங்காரத்திலும், பகல் 11.30 மணிக்கு சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் பச்சை கடைசல் சப்பரத்தில், பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வருதல் நடைபெறும்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பத்தாம் நாள் திருவிழா தினமான மார்ச் 6-ம் தேதி, 7 மணிக்குத் தேரோட்டம் நடக்க இருக்கிறது. மார்ச் 7-ம் தேதி இரவு 10:30 மணிக்கு தெப்ப உற்சவம் நடைபெறும். மார்ச் 8-ம் தேதி சிறப்பு பூஜையுடன் திருவிழா நிறைவு பெற இருக்கிறது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளைக் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் அருள் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். திருவிழா நாள்களில் தினமும் மாலை சுவாமி, அம்பாள் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருதல் நடைபெறும்.
இத்திருவிழாவில் 7-ம் நாள் மற்றும் 8-ம் நாள் திருவிழாக்கள் தனிச்சிறப்பானவை. ஆண்டிலேயே இந்த 2 நாள்தான் சுவாமி சண்முகர் உலா வருவார். முருகப் பெருமான் இத்தலத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமாகவும் திகழ்ந்து அருள்பாலிக்கிறார் என்பது இந்த நாள் திருவிழாக்களின் அர்த்தமாகும்.
அதைக் காட்டும் வகையில் ஆவணி மற்றும் மாசித்திருவிழாக்களில் 7-ம் நாளில் சிகப்பு சாத்தி அலங்காரத்திலும், 8-ம்நாள் திருவிழாவில் வெள்ளை மற்றும் பச்சை சாத்தி அலங்காரத்திலும் சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் அருள்பாலிப்பார்.
சிவப்பு சாத்தியில் சுவாமியின் அம்சம், ஆராதனைகள், அலங்காரம் முழுவதும் சிவப்பாகவே இருக்கும். வெள்ளை, பச்சை சாத்தியிலும் அந்த நிற அலங்காரம் இருக்கும். இதில், பச்சை சாத்தில் அலங்காரத்தைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.