மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இரத்தம்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு, அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த்தின் வழிகாட்டலின் கீழ் நேற்று (20) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசரப் பிரிவில் ஏற்படுகின்ற இரத்தப் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் நோக்கில் ”உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் பொறுப்பதிகாரி வைத்தியர் கீர்த்திகா மதன்அழகன் உரையாற்றுகையில் ‘போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு ஒரு வருடத்திற்கு 1500 அலகு உதிரம் தேவைப்படுவதாகவும், தலசிமியா நோயாளர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் போன்றவர்களுக்கு அதிகளவான குருதி தேவைப்படுகின்றன’ எனத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடந்த காலங்களில் குருதி தட்டுப்பாடு ஏற்பட்ட போது வேறு மாவட்டங்களிடமிருந்தே குருதியை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை காணப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் குருதிக்கொடை வழங்கப்பட்டு வருகின்றமையினால் குருதிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு உதவியாக உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) நவருபரஞ்சினி முகுந்தன்இ 231 படைப்பிரிவின் பிரிகேடியர் திலூப்ப பண்டார, மாவட்ட செயலக பிரதம கணக்காளர் இந்திராதி மோகன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன்இ மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கே.கணேசலிங்கம், பிரதம பொலிஸ் அத்தியட்சகர் எல்.பி.ஜே.பி.குமாரசிங்க, மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் க.மதிவண்ணன், சிரேஷ்ட நில அளவை அத்தியட்சகர் லலித் பெரேரா, மாவட்ட செயலக பதவிநிலை அதிகாரிகள், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், சர்வதேச லயன் கழகத்தின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

அத்துடன் இவ் இரத்ததான நிகழ்விற்கு இராணுவம், பொலிஸ், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் மாவட்ட செயலகம், நில அளவை திணைக்களம், வலயக்கல்வி அலுவலகம் ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டதுடன் குருதி வழங்கியவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.