ஷில்லாங்: மேகாலயா சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளர் இறந்ததால் சோஹியோங் தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடைபெறும் நிலையில், 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வருகிற பிப்ரவரி 27ம் தேதி சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதையடுத்து கட்சிகள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. அரசியல் கட்சிகள் இறுதிகட்ட பிரசாரத்தில் இறங்கியுள்ளன.
இந்த நிலையில், மேகாலயா மாநிலம் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள சோஹியோங் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டுள்ள ஐக்கிய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் எச்டிஆர் லிங்டோவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் காலமானார். இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி எஃப்.ஆர்.கார்கோங்கோர் கூறுகையில், ‘சோஹியோங் தொகுதியின் வேட்பாளரான எச்டிஆர் லிங்டோ திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார். எனவே அந்தத் தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்படும். வரும் 27ம் தேதி வாக்குப்பதிவுக்கு பின்னர், அடுத்த சில வாரங்களில் தேர்தல் நடத்தப்படும்’ என்றார்.