*அடிப்படை வசதிக்கான பணிகளும் ரூ.82 லட்சம் மதிப்பீட்டில் நடக்கிறது
மேலூர் : மேலூர் உழவர் சந்தை உள்ளாட்சியில் நகராட்சியை திமுக கைப்பற்றிய பிறகு தற்போது புத்துயிர் பெற்று, சிறப்பாக செயல்பட துவங்கி உள்ளது. மேலும் தற்போது சந்தையில் ரூ.82 லட்சம் மதிப்பீட்டில் அடிப்படை வசதிகளுக்கான பணிகளும் நடந்து வருகிறது.மேலூர் சந்தைபேட்டையில், மக்கள் பயன்பாட்டிற்காக 46 கடைகள் கொண்ட உழவர் சந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் முதல்வராக இருந்த போது துவக்கப்பட்டது.
இதை தொடர்ந்து வந்த அதிமுக ஆட்சியில், அதை செயல்படாமல் இருப்பதற்குதேவையான நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டது. இதனால், நீண்ட வருடமாக மேலூர் உழவர் சந்தை பெயரளவிற்கு மட்டுமே இருந்து வந்தது. இதனால் இவ்விடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது. பகல் இரவு என எந்த நேரமும்,
இவ்விடத்தில் மோசமான நடவடிக்கை நடைபெற்று வந்தது.
திமுக ஆட்சிக்கு பின்மீண்டும் எழுச்சி
இந்நிலையில் திமுக ஆட்சி மீண்டும் வந்த போது, உழவர் சந்தைக்கு என புதிய நிர்வாக அலுவராக அன்பழகனும்,உதவி நிர்வாக அலுவலராக சாந்தியும் நியமிக்கப்பட்டனர். பயனற்ற நிலையில் கிடந்த உழவர் சந்தையை மீண்டும் எழுச்சி பெற செய்ய வேண்டும் என்ற நோக்கில் இருவரும் செயல்பட துவங்கினார். இதற்கு மாவட்ட வேளாண் வணிக பிரிவின் துணை இயக்குநர், மதுரை விற்பனை குழு செயலாளர் என அதிகாரிகள் பல்வேறு உதவிகள் மற்றும் அறிவுறுத்தல்களையும் அளித்தனர்.
இதை தொடர்ந்து வாரந்தோறும் ஒரு கிராமத்தை தேர்வு செய்து அங்குள்ள விவசாயிகளை சந்தித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களின் வேளாண் உற்பத்தி பொருட்களை உழவர் சந்தைக்கு கொண்டு வந்தனர். உழவர் சந்தைக்கு விளை பொருட்களை கொண்டு வருவதற்கு இலவச பஸ், லக்கேஜ் இலவசம், மின் வசதியுடன் கூடிய கடைகளுக்கு வாடகை கிடையாது, கமிஷன் கிடையாது,இடை தரகர் இல்லை என விவசாயிகளிடம் எடுத்து கூறியதால், கொஞ்சம் கொஞ்சமாக விவசாயிகள் மீண்டும் உழவர் சந்தைக்கு வர ஆரம்பித்தனர்.
46 கடைகள் கொண்ட உழவர் சந்தையில், பெயரளவிற்கு 7 கடைகள் செயல்பட்டதாக கணக்கு காட்டி வந்திருந்த நிலையில், தற்போது இது 33 கடைகளாக இது விரிவடைந்துள்ளது. உழவர் சந்தை மீண்டும் புத்துயிர் பெறுவதை கண்ட தமிழக அரசு, இதற்காக தற்போது ரூ.82 லட்சம் நிதி ஒதுக்கி, பணிகளை மேற்கொண்டுள்ளது. இந்த நிதி மூலம் பழுதான கடைகளை சீர்செய்ததுடன், புதிய அலுவலக அறை, ஆழ்துளை கிணறு, புதிய நடை மேடை, கழிப்பறை வசதிகள் என மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கிராமத்திற்கே சென்று விளக்கம்
இதுகுறித்து உழவர் சந்தை நிர்வாக அலுவலர் அன்பழகன் கூறியதாவது: உழவர் சந்தையின் செயல்பாடுகள் குறித்து, சரிவர தெரியாமல் இருந்த விவசாயிகளை வாரம் ஒரு கிராமம் என தேர்வு செய்து, அங்கு வயல் ஆய்வு செய்து, உழவர் சந்தை குறித்து விளக்கம் அளித்து,அவர்களை இங்கு வர செய்கின்றோம். இதுவரை 55க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம். இதனால் தற்போது 33 கடைகள் செயல்பட்டு வருகிறது.
விரைவில் இது 40 ஆக மாற உள்ளது. இதுபோக மாதம் இருமுறை விவசாயிகளுக்கு என தனி மீட்டிங் போட்டு, அவர்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்வதுடன், அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றுகிறோம். பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் ஒரு பாலமாக இருந்து,மாற்றுவதே எங்கள் நோக்கம் என்று கூறினார்.