பெங்களூரு: கர்நாடகாவில் பொதுவெளியில் குற்றச்சாட்டுகளை கூறி மோதிக் கொண்ட பெண் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெண் ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி மீது பொதுவெளியில் குற்றச்சாட்டு கூறிய ஐபிஎஸ் அதிகாரி ரூபா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். ரூபா குற்றச்சாட்டுக்கு பதிலடியாக அறிக்கை வெளியிட்ட பெண் ஐஏஎஸ் அதிகாரி ரோகிணியும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்திய பெண் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடையேயான மோதலில் அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. ஐபிஎஸ் அதிகாரி ரூபாவின் கணவர் முனீஸ் முட்கில் ஐஏஎஸ்.ம் இடமாற்றம் செய்யப்பட்டார்.
கர்நாடக அரசின் நிலஅளவைத்துறை ஆணையராக இருந்த முனீஸ் முட்கில் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். பெங்களூரு சிறையில் இருந்தபோது சசிகலா லஞ்சம் கொடுத்து சிறப்பு சலுகை பெற்றதாக குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியவர் ரூபா. ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி சிந்தூரி, ஆளும் பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவரை சந்தித்த புகைப்படத்தை ரூபா வெளியிட்டிருந்தார். சக ஐஏஎஸ் அதிகாரி சிலருக்கு ரோகிணி அந்தரங்க படங்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்பியதாக ரூபா குற்றம்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.
ரூபா குற்றச்சாட்டுகளுக்கு பதிலடியாக அவரை மனநோயாளி என ரோகிணி விமர்சித்திருந்தார். பொதுவெளியில் இரண்டு பெண் அதிகாரிகள் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்து மோதிக் கொண்டது கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியது. பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் ரூபா மற்றும் ரோகிணிக்கு கர்நாடக தலைமைச் செயலாளர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
பொதுவெளியில் குற்றசாட்டுகளை முன்வைக்கக்கூடாது என இருவரையும் கர்நாடக தலைமைச் செயலாளர் எச்சரித்து இருந்த நிலையில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மைசூரில் பணிபுரிந்தபோது சக பெண் அதிகாரியான ஷில்பா நாக் என்பவருடன் ஏற்பட்ட மோதலால் இடமாற்றம் செய்யப்பட்டவர் ரோகிணி. தற்போது ரூபா ஐபிஎஸ்.உடன் ஏற்பட்ட மோதலில் மீண்டும் ரோகிணி மாற்றப்பட்டுள்ளார்.