ரோகிணி சிந்தூரி ஐஏஎஸ், டி.ரூபா ஐபிஎஸ் ட்ரான்ஸ்பர்; சீக்ரெட் போட்டோ லீக்… கர்நாடக அரசு அதிரடி!

கர்நாடக மாநில அரசியலில் இரண்டு பெண் அதிகாரிகளால் பரபரப்பு ஏற்படும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ரோகிணி சிந்தூரி ஐஏஎஸ், கைவினைப் பொருட்கள் வளர்ச்சி கழக இயக்குநர் டி.ரூபா ஐபிஎஸ் ஆகியோருக்கு இடையில் நடந்த சமூக வலைதள மோதலை கண்டு ஒட்டுமொத்த நாடும் அதிர்ச்சி அடைந்தது.

அந்தரங்க புகைப்படங்கள்

ரோகிணி சிந்தூரியின் அந்தரங்க புகைப்படங்களை எடுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் டி.ரூபா வெளியிட்டார். இவற்றை இரண்டு, மூன்று ஐஏஎஸ் ஆண் அதிகாரிகளுக்கு ரோகிணி அனுப்பியிருப்பதாக குற்றம்சாட்டினார். இவை எல்லாம் ஒரு உயர் அதிகாரிக்கு உகந்த செயலா? எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த சம்பவம் நடந்து சில மாதங்கள் ஆன நிலையில், தற்போது தான் இந்த படங்கள் தன்னுடைய கைக்கு கிடைத்தன.

ரோகிணி சிந்தூரி ஐஏஎஸ்

உடனே மாநில அரசு தரப்பிடம் தகவல் தெரிவித்து விட்டேன். கோலாரில் பணிபுரிந்து வந்த அதிகாரி ரவி தற்கொலை விவகாரத்தை அடுத்து சிபிஐ அறிக்கையில் ரோகிணியும் அந்த அதிகாரியும் சாட்டிங் செய்த குறுந்தகவல்கள் குறித்த விவரங்கள் இடம்பெற்றிருந்தன. அந்த அதிகாரியின் நம்பரை பிளாக் செய்யாமல் ஏன் தொடர்ந்து பேசி வந்தார்? குடும்பத்தில் பிரச்சினை ஏற்படுத்தவா? எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய ரோகிணி ஐஏஎஸ், என்னுடைய வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸில் வைத்திருந்த படங்களை எடுத்திருக்கிறார். மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு நான் எனது தனிப்பட்ட படங்களை அனுப்பியதாக கூறியுள்ளார். அவர்கள் பெயரை வெளியிட வேண்டியது தானே? ரூபாவிற்கு மனநிலை சரியில்லை என நினைப்பதாக குற்றம்சாட்டினார்.

பிரதமர் அலுவலகம் அதிருப்தி

இந்த விவகாரம் பற்றி தகவலறிந்து பிரதமர் அலுவலகம் மிகுந்த அதிருப்தி அடைந்தது. இரண்டு பெண் அதிகாரிகளின் மோதலை கட்டுப்படுத்த தவறியது ஏன்? என்று முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு டோஸ் விட்டது. இதற்கிடையில் இரண்டு பெண் அதிகாரிகளுக்கு மாநில அரசு தரப்பில் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுவெளியில் இவ்வாறு செய்யக் கூடாது.

கர்நாடக அரசு உத்தரவு

மீடியாவை சந்திக்கக் கூடாது என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு அதிகாரிகளையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி கர்நாடக மாநில அரசின் தலைமை செயலாளர் ஆணை பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட உத்தரவில், ரோகிணி ஐஏஎஸ் வகித்த இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதவிக்கு பசவராஜேந்திரா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

டி.ரூபா ஐபிஎஸ் பணியிடமாற்றம்

டி.ரூபா ஐபிஎஸ் வகித்து வந்த கைவினைப் பொருட்கள் வளர்ச்சி கழக இயக்குநர் பதவிக்கு பாரதி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி டி.ரூபாவின் கணவர் முனிஷ் மவுத்கில் நில அளவை மற்றும் ஆவணக் காப்பக ஆணையர் பதவியில் இருந்து நிர்வாக சீர்திருத்தத் துறை முதன்மை செயலாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இனியாவது இருவரும் சைலண்ட் மோடிற்கு செல்வார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.