கர்நாடகாவில் பிரபல இரு பெண் அதிகாரிகள் அந்தரங்க விஷயங்களை பொது வெளியில் பகிர்ந்து மாறி மாறி தாங்கிக்கொள்ளும் சம்பவம் அம்மாநில அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தால் உள்துறை அமைச்சகமும் கொதிப்பாகியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சொத்துகுவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
அப்போது, சிறைத்துறை டி.ஐ.ஜியாக இருந்தவர்தான் ரூபா மௌத்கில் ஐபிஎஸ். இவர் தற்போது, கர்நாடக கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். அதுபோல, கர்நாடகாவின் இந்து சமய அறநிலையத் துறை ஆணையராக இருப்பவர் ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்துரி. இருவருக்குள்ளும் தற்போது உச்ச கட்ட மோதல் வெடித்துள்ளது.
அறநிலையத் துறை ஆணையராகப் பணியாற்றி வரும் ரோகினி சிந்துரி, மைசூருவின் ஜேடி(எஸ்) எம்எல்ஏ சாரா மகேஷ் ஆகியோர் உணவகத்தில் ஒன்றாக அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் அண்மையில் வெளியானது.
அதுகுறித்து சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட ஐபிஎஸ் அதிகாரி ரூபா, ஒரு அதிகாரி அரசியல்வாதியை ஏன் சந்திக்கிறார் என்றும் சமரசம் செய்யப்படுகிறாரா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். இப்படி ஆரம்பித்த இந்த விஷயம் இப்போது இரு அதிகாரிகளுக்கு இடையே நாத்தனார் சண்டையாக மாறியுள்ளது.இருவரும் அரசு அதிகாரிகள் என்பதை மறந்து அந்தரங்க அளவில் இறங்கி அடித்துக்கொள்கின்றனர்.
ரோகினி சிந்துரியின் தனிப்பட்ட சில படங்களை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள ரூபா, அந்த படங்களை ஆண் அதிகாரிகளுக்கு ரோகினி அனுப்பியதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ரோகினிக்கு எதிரான 20 குற்றச்சாட்டுகளையும் மற்ற அதிகாரிகளுடன் ரோகினி சிந்துரிக்கு இருந்த பழக்கம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளையும் வைத்துள்ளார்.
இதற்கிடையில், ரோகினி மீது பல ஊழல் புகார்களை பட்டியலிட்டு, அவர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தலைமை செயலாளருக்கு ரூபா கடிதம் எழுதியுள்ளார். இருப்பினும், கர்நாடக அரசின் இரண்டு பெண் உயர் அதிகாரிகள் பொது வெளியில் இப்படி மோதிக்கொள்வது மாநிலத்தில் உள்ள பாஜக அரசுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் அலுவலகம் தலையிட்டு முதல்வர் பசவராஜ் பொம்மையை கேள்வி கேட்கும் அளவுக்கு இப்பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. மேலும், தொடக்கத்திலேயே இந்த பிரச்னையை முடித்துவைக்க முதல்வர் தவறவிட்டதாக பிரதமர் அலுவலகமே அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு அதிகாரிகளுக்கு இடையே வளர்ந்து வரும் பகையை அறிந்திருந்தும், இந்த பொதுச் சண்டையை பசவராஜ் பொம்மை ஏன் தடுக்கத் தவறினார் என்று கேள்விகள் இப்போது அவரை நோக்கி பாய தொடங்கிவிட்டன.
துப்பாக்கி எடுக்கும் காக்கி… தமிழகத்தில் திடீரென கிளம்பிய ஷூட்டிங்.. ஏன்?
இந்நிலையில், இரண்டு உயர் அதிகாரிகள் பொது வெளியில் நடந்துகொண்ட விதம் ஏமாற்றம் அளிப்பதாகக் கூறிய கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, சர்வீஸ் கேடர் விதிகளை மீறியதாக ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்துரி மற்றும் ஐபிஎஸ் அதிகாரி ரூபா இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.