நாகலாபுரம் ஆரே நீர்வீழ்ச்சி; சென்னைக்கு அருகே இப்படி ஒரு குதூகலம்… மீண்டும் திறந்தாச்சு!

தலைநகர் சென்னையில் மக்கள் நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொழுதுபோக்கு அம்சங்களும் அதிகம் தேவைப்படுகின்றன. மால்கள், தியேட்டர்கள், கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் உள்ளிட்டவற்றை தாண்டி இயற்கை சார்ந்த விஷயங்கள் மீதும் ஆர்வம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னைக்கு அருகில் நீர்வீழ்ச்சி இருக்கும் இடம் என்றால் அது நாகலாபுரம் ஆரே நீர்வீழ்ச்சி தான்.

சித்தூரில் நீர்வீழ்ச்சி

இது சென்னையில் இருந்து 70 கிலோமீட்டர் தூரத்தில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சென்னைவாசிகள் பெரிதும் மகிழ்ந்து உற்சாக குளியல் போட்டு இனிமையாக பொழுதை கழிக்கலாம். ஆனால் இந்த நீர் வீழ்ச்சியில் போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால் அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில் 2018ஆம் ஆண்டு திடீரென மூடப்பட்டது.

சென்னைக்கு அருகில்

இந்நிலையில் போதிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் உடன் வனத்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு சமீபத்தில் நாகலாபுரம் ஆரே நீர்வீழ்ச்சி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் இயற்கை ஆர்வலர்கள், ட்ரக்கிங் செல்வோர், சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இங்கு சென்ற சிலர் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட விஷயம் தீயாய் பரவத் தொடங்கியது.

பிரபலமான ஆரே நீர்வீழ்ச்சி

இதையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் ஆரே நீர்வீழ்ச்சியில் எடுத்த படங்களை தொடர்ந்து பதிவேற்றம் செய்து வருகின்றனர். முன்னதாக சென்னையை ஒட்டி தடா, தலக்கோனா, கலைசகோனா ஆகிய நீர்வீழ்ச்சிகள் மிகவும் பிரபலமான இடங்களாக காணப்படுகின்றன.

மீண்டும் திறப்பு

இந்த வரிசையில் நாகலாபுரத்திற்கும் மவுசு கூடியுள்ளது. இங்கு மூன்று நீர்வீழ்ச்சிகள் இருக்கும் நிலையில் ஒன்றை மட்டும் அரசு தற்போது ஆந்திர மாநில அரசு திறந்துள்ளது. போதிய பாதுகாப்பு அம்சங்கள் உடன் படிப்படியாக மற்ற நீர் வீழ்ச்சிகள் திறக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய வசதிகள்

அதேசமயம் கழிவறைகள், உணவகங்கள், அறிவிப்பு பலகைகள், சாலைகள் உள்ளிட்டவற்றில் மேம்படுத்த வேண்டிய விஷயங்கள் இருப்பதாக சுற்றுலா பயணிகள் குறிப்பிட்டுள்ளனர். இங்கு சுற்றுலாவை மேம்படுத்தினால் அருகிலுள்ள கிராமவாசிகள் பெரிதும் பயனடைவர் என்று கூறப்படுகிறது. தினசரி காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை ஆரே நீர்வீழ்ச்சி திறந்திருக்கும்.

கட்டண விவரங்கள்

இங்கு நேரடியாக வந்து சேர பொதுப் போக்குவரத்து வசதிகள் கிடையாது. தனியார் வாகனங்களை தான் பயன்படுத்த வேண்டும். ஒரு நபருக்கு நுழைவு கட்டணம் 50 ரூபாய். பார்க்கிங் கட்டணம் 300 ரூபாய். இந்த சூழலில் வார இறுதி நாட்களில் சென்னைவாசிகள் பலரும் குடும்பத்தினர், நண்பர்கள் உடன் தவறாமல் நாகலாபுரம் ஆரே நீர்வீழ்ச்சிக்கு படையெடுத்து விடுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.