ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்யக் கோரி பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து சட்டம் இயற்றியது.
இந்த தடை சட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிறுவனங்கள் மனுத்தாக்கல் செய்தன.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசு சார்பில், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வதற்கான உரிய காரணங்களை விளக்காததால் தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதனையடுத்து, தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்ற முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. மேலும், இந்த அவரச சட்டத்திற்கு ஆளுநரும் உடனடியாக ஒப்புதல் அளித்தார். ஆனால், அந்த அவசர சட்டம் காலாவதியாகிவிட்டது.
அதே சமயத்தில் தமிழக சட்டப்பேரவையில் இயற்றிய தடை சட்டத்திற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.
இதற்கிடையே, தமிழக அரசின் ஆன்லைன் தடை சட்டத்தை ரத்து செய்ய உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.