சிம்லா: இமாச்சல பிரதேச அரசு பணியாளர் தேர்வாணையத்தை அம்மாநில அரசு கலைத்தது. அரசு பணியாளர்கள் தேர்வு வினாத்தாள் வெளியானதை அடுத்து தேர்வாணையத்தை கலைத்து இமாச்சல அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. புகாருக்குள்ளான தேர்வாணைய ஊழியர்கள் மீது விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் சுக்விந்தர் அறிவித்துள்ளார்.
JOA (IT) தாள் ரூ. 2.5 லட்சத்திற்கு விற்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் விஜிலென்ஸ் பீரோ நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட HPSSC பெண் ஊழியரின் மகன், புகார்தார் சஞ்சீவ் என்கிற சஞ்சய்யுடன் சேர்ந்து தங்கள் வீட்டிற்கு வந்து 2.5 லட்சம் ரூபாய் கொண்டு வருமாறு கூறியதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, கூடுதல் எஸ்பி ரேணு சர்மா தலைமையிலான விஜிலென்ஸ் குழு, வினாத்தாளை வாங்கியதாகக் கூறப்படும் HPSSC இன் ரகசியக் கிளையில் மூத்த அலுவலக உதவியாளராகப் பணிபுரியும் ஒரு பெண், அவரது மகன், ஒரு சந்தேகப்படும் நபர் மற்றும் 3 வேட்பாளர்கள் என ஆறு பேரை மாநில ஊழல் தடுப்பு துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.2.5 லட்சம் மற்றும் வினாத்தாளைக் கைப்பற்றியது.
இந்நிலையில், இமாச்சல பிரதேச அரசு பணியாளர் தேர்வாணையத்தை கலைத்து விட்டதாக அம்மாநில முதல்வர் சுக்விந்தர் அறிவித்துள்ளார். அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயல்பாடுகளை ஹிமாச்சல பிரதேச பொது சேவை ஆணையம் எடுத்துக் கொள்ளும் என சுக்விந்தர் கூறியுள்ளார்.
பணியாளர் தேர்வு வினாத்தாள் வெளியானது குறித்து துறை வாரியாகவும், காவல்துறை மூலமும் விசாரணை நடத்தப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளாகவே இமாச்சல பிரதேச தேர்வாணைய வினாத்தாள்கள் இடைத்தரகர்களுக்கு தரப்பட்டது விசாரணையில் தெரியவந்து. புகாருக்குள்ளான தேர்வாணைய ஊழியர்கள் மீது விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் சுக்விந்தர் கூறியுள்ளார்.