கிருஷ்ணகிரியில் சில நாட்களுக்கு முன்பு ராணுவ வீரர் பிரபு என்பவரை திமுக கவுன்சிலர் குடும்பம் அடித்து கொலை செய்தது. இந்த விவகாரத்தை கையில் எடுத்த பாஜக தமிழகத்தின் சட்ட ஒழுங்கை கடுமையாக விமர்சித்ததுடன் முன்னாள் ராணுவ வீரர்களை திரட்டி தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தது. அதன்படி, இன்று சென்னை சேப்பாக்கத்தில் பாஜகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
அதில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்று உரையாற்றினார். அவரை தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களும் உரையாற்றினர். அப்போது, ஓய்வு பெற்ற கர்னல் பாண்டியன் பேசியது உண்ணாவிரத போராட்ட களத்தை ரணகளமாக்கியது. கர்னல் பாண்டியன் பேசுகையில், உலகத்திலேயே ஒழுக்கமான ஆர்மி இந்தியன் ஆர்மி தான்.
அப்படிப்பட்ட ராணுவ வீரர்களை சீண்டினால் அது தமிழகத்திற்கும், தமிழக அரசுக்கும் நல்லதல்ல. இந்திய ராணுவ வீரர்களுக்கு நன்றாக சுடவும் தெரியும், குண்டு வைக்கவும் தெரியும். ஆனால், நாங்கள் அதை ஒருபோதும் செய்யப்போவதில்லை. எங்களை சீண்டிப்பார்த்தால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கெட்டுவிடும் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.
அதனால் அங்கிருந்த பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியபோது கர்னல் பாண்டியன் அவர்களை விமர்சித்தார். இதனால் அங்கு சற்று பரபரப்பு நிலவியது. இதனை அடுத்து, பத்திரிகையாளருக்கு பேட்டி கொடுத்த கர்னல் பாண்டியனிடம், ஒரு அரசியல்வாதியை போல நீங்கள் ஏன் பேசுகிறீர்கள்? தமிழக அரசுக்கு இப்படி மிரட்டல் விடுக்கலாமா என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை என்றார். மேலும், இனிமேலும் தமிழத்தில் சட்ட ஒழுங்கு நிலை இப்படி தொடர்ந்தால் நிச்சயமாக பாம் வைப்போம் என்று அவர் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். இந்நிலையில், பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் குண்டு வைப்போம், துப்பாக்கி சுடுவோம் என்று பேசிய கர்னல் பாண்டியனை கைது செய்யக்கோரி பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.