கணவர் கழுத்தை நெரித்து கொன்ற நர்ஸ் கள்ள காதலன் உட்பட நால்வர் கைது
திருத்தணி: திருத்தணியில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, காதலனுடன் சேர்ந்து கொலை செய்த நர்ஸ் உள்ளிட்ட நான்கு பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த சந்திரவிலாசபுரம் ஊராட்சிக்குட்பட்ட சுந்தர்ராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ், 29. இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். திருத்தணி – அரக்கோணம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக, காயத்ரி பணிபுரிந்து வந்தார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன், யுவராஜீக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த உறவினர் மகள் காயத்ரி, 25, என்பவருக்கும், திருமணம் நடந்து, 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, கணவர் யுவராஜ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, அக்கம்பக்கத்தவர்களிடம் கூறி காயத்ரி கதறி அழுதுள்ளார். ஆனால், யுவராஜ் தந்தை ஆறுமுகம், தன் மகன் சாவில் மர்மம் உள்ளதாக, ஆர்.கே.பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்படி, ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். மேலும், போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை சந்தேகத்தின்படி, காயத்ரியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில், காயத்ரி போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியதாவது:
சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் படித்த போது, அங்கு பணியாற்றி வந்த திருத்தணி, அகூர் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன், 30, என்பவரை காதலித்தேன். எங்கள் காதல் விஷயம் தெரிந்ததும் என் பெற்றோர், என்னை மாமன் மகன் யுவராஜுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
சில மாதங்களாக, திருத்தணியில் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தேன்.
அதே மருத்துவமனையில் என் பழைய காதலர் சீனிவாசனுடன் மீண்டும் தொடர்பு ஏற்பட்டு, தனிமையில் அடிக்கடி சந்தித்து வந்தோம். என் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர் யுவராஜ், என்னை வேலையில் இருந்து நிறுத்தி விட்டார்.
இதனால், எனக்கும், யுவராஜிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதை சீனிவாசனிடம் கூறினேன். கணவரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டோம். நேற்று முன்தினம் வீட்டில் யுவராஜ் துாங்கிக் கொண்டிருந்தார்.
சீனிவாசன், அவரது நண்பர்கள் திருத்தணி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 28, ஜில்லு என்கிற ஹேம்நாத், 22, ஆகியோர் வீட்டிற்கு வந்தனர். நாங்கள் சேர்ந்து, என் கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்தோம். பின், அவர் துாக்கிட்டு தற்கொலை செய்ததாக அக்கம் பக்கத்தவரிடம் தெரிவித்தேன்.
இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த சீனிவாசன், மணிகண்டன், ஹேம்நாத் என்கிற ஜில்லு மற்றும் காயத்ரி ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து, திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பெண் போலீஸ் பலாத்காரம் இன்ஸ்பெக்டர் ‘சஸ்பெண்ட்’
கோல்கட்டா: மேற்கு வங்கத்தின் கிஷான்கஞ்சில், எல்லைப் பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு, நேற்று முன்தினம் பணியில் இருந்த பெண் கான்ஸ்டபிளை, இன்ஸ்பெக்டர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கான்ஸ்டபிள் அளித்த புகாரின்படி, இன்ஸ்பெக்டர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார்.
ரூ.6 கோடி மோசடி தம்பதி சிக்கினர்
சென்னை : சென்னை, போரூரைச் சேர்ந்தவர் ஹரிஹர சுப்ரமணியம், 37. இவரது மனைவி காஞ்சனா, 25. இவர்கள், கீழ்கட்டளையில் உள்ள, மருந்து கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தனர்.
இவர்கள், அமெரிக்க நிறுவனத்திற்கு, போலி மருந்துகளை அனுப்பி, 6.30 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர்.
இது குறித்து, அந்நிறுவனத்தின் நிர்வாகி, சென்னை போலீஸ் கமிஷனருக்கு, ‘ஆன்லைன்’ வாயிலாக புகார் அளித்துள்ளார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, ஹரிஹர சுப்பிரமணியம் மற்றும் காஞ்சனா ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை
காரைக்கால்: குடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காரைக்கால், இந்திரா நகரைச் சேர்ந்தவர் செய்யது அப்துல் ரகுமான்,46; இவரது மனைவி மெகராஜ் பேகம். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். செய்யது அப்துல் ரகுமான் மது அருந்துவதால் அவருக்கு கடந்த சிலநாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் அப்துல்ரகுமான் மது குடித்தார். அதனை அவரது மனைவி கண்டித்தார். அதில் விரக்தியடைந்த அப்துல்ரகுமான் நேற்று விடியற்காலை வீட்டிலேயே துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து காரைக்கால் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
உறவுப்பெண் ஆபாசமாக சித்தரிப்பு பெண் பொறியாளர் கைது
கோவை : உறவுக்கார பெண்ணை சமூக வலைதளத்தில் ஆபாசமாக சித்தரித்த பெண் பொறியாளர், கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கோவையை சேர்ந்த கவுசல்யா, 23, தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது நெருங்கிய உறவினர் மகள், மருத்துவம் படித்து வருகிறார். கவுசல்யாவுக்கும், மருத்துவ மாணவிக்கும் இடையே முன் விரோதம் இருந்தது.
அவரை பழி வாங்கும் எண்ணத்தை வளர்த்துக் கொண்ட கவுசல்யா, மருத்துவ மாணவியின் நண்பரான பொறியாளர் பாலகிருஷ்ணன், 24, என்பவரிடம் சமூக வலைதளம் மூலம் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார்.
பாலகிருஷ்ணனிடம் இருந்து, மருத்துவ மாணவியின் படங்களை வாங்கிய கவுசல்யா, அவற்றை ஆபாசமாக ‘மார்பிங்’ செய்து சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். படங்களை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் குடும்பத்தினர், கோவை மாவட்ட எஸ்.பி., பத்ரி நாராயணனிடம் புகார் அளித்தனர். எஸ்.பி., உத்தரவுபடி சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், உறவினரான கவுசல்யா, மருத்துவ மாணவி மீது கொண்ட பொறாமையால் இந்த செயலை செய்திருப்பதும், அதற்கு மாணவியின் நண்பர் பாலகிருஷ்ணன் உடந்தையாக இருந்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவுகளின் அடிப்படையில், கவுசல்யா, பாலகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
போதைக்கு மாத்திரை விற்ற நால்வர் கைது
கொடுங்கையூர்: வண்ணாரப்பேட்டை கிழக்கு கல்லறை சாலையில், போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, கஞ்சா மற்றும் உடல் வலி நிவாரணி மாத்திரைகளை மறைத்து வைத்திருந்தது தெரிந்தது.
விசாரணையில் அவர்கள், பழைய வண்ணாரப்பேட்டை, கிழக்கு கல்லறை தோட்டம் சாலையைச் சேர்ந்த கார்த்திக், 32, சதீஷ்குமார், 27, சரத்குமார், 29, நல்லப்ப வாத்தியார் தெருவைச் சேர்ந்த சஞ்சய், 21, என தெரிந்தது.
அவர்களிடம் இருந்த 500 கிராம் கஞ்சா, 750 உடல் வலி நிவாரணி மாத்திரைகள், ஒரு கத்தி மற்றும் இருசக்கர வாகனத்தை, போலீசார் பறிமுதல் செய்தனர். நால்வரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்